கபில சந்திரசேன மரண விவகாரம் ; தொலைபேசிக்காக அமெரிக்காவின் உதவியை நாடும் இலங்கை அதிகாரிகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசியை அன்லொக் செய்வதற்கு (உள்நுழைவதற்கு) அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் எனப்படும் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பின் உதவி கோரப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
குபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் நீதிமன்ற விசாரணை 5-வது நாளாகவும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.
கைபேசியை அன்லொக் செய்வதற்கான உதவிக்கோரிக்கை மின்னஞ்சல் மூலம் எஃப்.பி.ஐ அமைப்பிடம் விடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.அங்கிருந்து கிடைக்கப் பெறும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் கைபேசி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கபில சந்திரசேனவின் மரணம் குறித்து இதுவரை 18 நபர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதவான் இதன்போது தெரிவித்தார். இன்றைய தினம் இரு சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கபில சந்திரசேனவிற்கு சட்டப் பிரதிநிதித்துவம் வழங்கிய ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் அவரது உதவிச் சட்டத்தரணி ஆகியோரை மேலதிக சாட்சியங்களை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோரியிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், உத்தியோகபூர்வ நீதிமன்றக் கடமைகள் காரணமாக அவர்கள் இன்று முன்னிலையாகவில்லை எனத் தெரிவித்த அதிகாரிகள், அவர்களுக்கு அழைப்பாணை வழங்கி பிறிதொரு திகதியில் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடுமாறு கோரினர்.
இதற்குப் பதிலளித்த நீதவான், இந்த வழக்கில் இதுவரை சாட்சியமளித்த 18 சாட்சிகளும் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தனரே தவிர, எவருக்கும் உத்தியோகபூர்வ அழைப்பாணை விடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த இரு சட்டத்தரணிகள் விடயத்திலும் அதே நடைமுறையையே பின்பற்றுமாறு உத்தரவிட்ட நீதவான், அவர்களுக்கு அழைப்பாணை விடுவிக்குமாறு கோரிய விசாரணை அதிகாரிகளின் கோரிக்கையை நிராகரித்தார்.
கபில சந்திரசேனவிற்கு பிணை பெறுவதற்காகப் பிணையாளியாகக் கையெழுத்திட்ட இந்திக ரத்நாயக்க என்பவர் இன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். “கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கபில சந்திரசேன தன்னை அழைத்து, ‘இந்திக, எனக்கு ஒரு பெரிய உதவி வேண்டும். நான் பிணையில் செல்ல நேரிடலாம், அதற்கு நீ பிணையாளியாக இருக்க வேண்டும்.
கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைத் தயார்படுத்தி வை’ எனக் கூறியதாக அவர் மன்றில் தெரிவித்தார். “அவர் கூறியபடி தான் அனைத்தையும் தயார் செய்தேன். மே 5 ஆம் திகதி அவருக்குப் பிணை வழங்கப்பட்டதை அறிந்து, சட்டத்தரணி உதாரவைத் தொடர்புகொண்டு நான் தயாராக இருப்பதாகக் கூறினேன்.
அத்துடன், நீதிமன்றத்திற்குச் சென்று 10 மில்லியன் ரூபாய் தனிப்பட்ட பிணையில் கையெழுத்திட்டேன் என்றும் அவர் கூறினார். பின்னர் மே 7 ஆம் திகதி அரவிந்த என்பவர் என்னை அழைத்து ஒரு சட்டத்தரணியைச் சந்திக்க வருமாறு கூறினார்.
நான் அவரது வீட்டிற்குச் சென்றேன். அங்கிருந்து அரவிந்த, அவரது மனைவி, சமில், சாந்த, ஃபெர்டி மற்றும் நான் என அனைவரும் அரவிந்தவின் வாகனத்தில் சென்று சட்டத்தரணியைச் சந்தித்தோம்.
கூட்டம் முடிந்ததும் மீண்டும் அரவிந்தவின் வீட்டிற்கு வந்தோம். அங்கு இரவு உணவு தயாராக இருந்தது. கபில சந்திரசேனவும் எங்களுடன் இரவு உணவு மேசைக்கு வந்தார். உணவு முடிந்து நான் கிளம்பினேன்.
மறுநாள் காலை, அதாவது மே 8 ஆம் திகதி, கபில சந்திரசேன காலமானார் என்ற செய்தியை ஊடகங்களில் பார்த்தேன்.” இந்தச் சாட்சியத்தைத் தொடர்ந்து, அரவிந்த டி சில்வாவின் வீட்டில் சிசிடிவி கெமராக்களைப் பொருத்தச் சென்ற மின்சாரப் பணியாளரான ஹேமந்த சமன்குமார என்பவரிடமும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து, கபிலவின் மரணம் தொடர்பான மேலதிக நீதவான் நீதிமன்ற விசாரணை எதிர்வரும் மே 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.