;
Athirady Tamil News

பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் அதிரடி சோதனை – இருவர் கைது

0

பேராதனைப் பல்கலைக்கழக விடுதி ஒன்றில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி சுற்றிவளைப்பு
பல்கலைக்கழகத்தின் விடுதியில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சுற்றிவளைப்பின் போது இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களிடமிருந்தும் ஒட்டுமொத்தமாக 7 ஆயிரத்து 530 மில்லிகிராம் போதைப்பொருள் மற்றும் 40 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் 23 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் கோட்டை மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழக விடுதிகளுக்குள் தங்கியிருக்கும் ஏனைய மாணவர்களுக்கும் அதனை இரகசியமாக விற்பனை செய்ய முற்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விடுதிகளில் திடீர் சோதனை
இதற்கு முன்னரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு விடுதியில் மாணவர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்த சம்பவத்தைப் பொலிஸார் நினைவு கூர்ந்தனர்.

சமீபகாலமாகப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் புழக்கம் அதிகரித்து வருவதாகப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், பாதுகாப்புப் பிரிவுக்கும் தொடர்ச்சியாகப் புலனாய்வுத்தகவல்கள் கிடைத்து வருகின்றன.

இதன் காரணமாகவே, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுப் பாதுகாப்புப்பிரிவினர் விடுதிகளில் இவ்வாறான திடீர்ச் சோதனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை பேராதனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.