;
Athirady Tamil News

அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது: ஈரான் எச்சரிக்கை

0

தெஹ்ரான்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் நாட்டில் வைத்து, 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்தது. எனினும் போர் நிறுத்த நீட்டிப்புக்கான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் தணிந்துள்ளது.

ஆனால், ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கப்பல்கள் தொடர்ந்து முற்றுகையிடுவது நடந்து வருகிறது. மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலான சூழல் தொடர்ந்து நிலவி வரும் சூழலில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி இன்று கூறும்போது, அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இந்த பகுதி பாதுகாப்பு அரணாக தொடர்ந்து நீடிக்காது.

இந்த பகுதியிலும், நாடுகளிலும் ராணுவ தளங்களை நிறுவி, தவறாக நடந்து கொள்வதற்கு அமெரிக்காவுக்கு இந்த பகுதி தொடர்ந்து பாதுகாப்பான புகலிடம் என்ற வகையில் இருக்காது என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

உலக நாடுகளுக்கு தேவையான பெரும்பான்மையான சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்து செல்கின்றன. எனினும், ஈரான் மற்றும் அமெரிக்கா மோதலால் இந்த பகுதியில் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இது, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலையுயர்வால் பொதுமக்களிடையே தாக்கமும் ஏற்படுத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.