;
Athirady Tamil News

பழங்குடியினரின் பாரம்பரிய நிலங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

0

ரம்புகன்ஓய மற்றும் பொல்லபெத்த ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆதிவாசி மக்களுக்குச் சொந்தமான அவர்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாவலி அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தங்களது பாரம்பரிய நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்குப்ருக்குப் பரிமாற்றம் செய்வதை எதிர்த்து, ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலெத்தோ மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, எதிர்மனுதாரரான மகாவலி அதிகார சபை இந்த அறிவிப்பை விடுத்தது.

பொல்லபெத்த மற்றும் ரம்புகன்ஓய பிரதேசங்களில் உள்ள தங்களது பாரம்பரிய நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு மகாவலி அதிகார சபை எடுத்திருந்த தீர்மானத்தை எதிர்த்து, ஆதிவாசித் தலைவர் உள்ளிட்ட மனுதாரர்களால் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று பரிசீலனைக்காக அழைக்கப்பட்ட போது, ஆதிவாசிகளுக்குச் சொந்தமான அக்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மகாவலி அதிகார சபை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இதன்போது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் விபரங்களை முன்வைக்கையில், இந்தச் சட்டவிரோதச் செயலுக்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், அக்குறிப்பிட்ட பகுதிகளில் காடுகளை அழித்த நபர்களைக் கொண்டு மீண்டும் காடுகளை வளர்க்க உத்தரவிடுமாறும் இந்த மனுவின் ஊடாகக் கோரப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்தார்.

முன்வைக்கப்பட்ட விபரங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.