அரசியலில் வங்குரோத்து அடைந்தவர்களின் கருவியாக வடக்கின் சுயேச்சைப் பிரதிநிதி!
அஹமட் இர்ஷாட்
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழல் எதிர்ப்பு மற்றும் நேர்மையான நிர்வாகத்தை மையமாகக் கொண்டு நாட்டில் முறையான மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றது. புதிய சட்டவாக்கத்துறை மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றின் தற்போதைய சுயாதீனமான செயற்பாடுகள் காரணமாக, நீண்டகாலமாக பாரம்பரிய அரசியலுக்குள் சட்டத்திற்கு முரணாக ஆதிக்கம் செலுத்தி வந்த தரப்பினர் பாரிய அரசியல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நற்பெயரையும் நம்பிக்கையையும் எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பல்வேறு வீழ்ச்சியடைந்த அரசியல் தரப்புகள் திட்டமிட்ட செயற்பாடுகளில் இறங்கியுள்ளன.
தற்போதைய அரசியல் சூழலில், வெறுமனே அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து, ஆக்கபூர்வமான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான மாற்றுத் திட்டங்களை முன்வைக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன. அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக எவ்வாறு பொய்ப் பிரசாரங்களை முடுக்கிவிடலாம் என்பதே அவர்களின் தற்போதைய பிரதான அரசியல் செயற்பாடாக உள்ளது.
அரசாங்கத்தின் ஊழலற்ற ஆட்சி என்ற பிம்பமும், சட்டத்திற்கு முன் யாவரும் சமம் என்ற கோட்பாடும் பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, மக்கள் மத்தியில் ஜனாதிபதியின் நற்பெயருக்கு நேரடியாகக் களங்கம் விளைவிக்க முடியாத பேரினவாத மற்றும் பாரம்பரிய அரசியல் சக்திகள், சிறுபிள்ளைத்தனமான மாற்று வழிகளைக் கையாள முற்பட்டுள்ளன. தெற்கில் முகவரி இழந்த சில அரசியல் தரப்புகள், வடக்கிலிருந்து அண்மைய தேர்தலில் தெரிவான சுயேச்சை மக்கள் பிரதிநிதியைத் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்கான கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இது அவர்களின் இயலாமையையே வெளிக்காட்டுகிறது.
ஊழலுக்கு எதிராகவும், புதியதொரு அரசியல் கலாசாரத்தை நோக்கியும் குரல் கொடுப்பார்கள் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு, யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட சுயேச்சை பாராளுமன்றப் பிரதிநிதியின் அண்மைக்கால நகர்வுகள் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளன. வடக்கில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, தென்னிலங்கையில் பாரம்பரிய ஊழல் அரசியல் மேடைகளில் தோன்றி, தற்போதைய அரசாங்கத்தின் வருகைக்குப் புலம்பெயர் அமைப்புகளே நிதியளித்ததாகச் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அவரது “இரட்டை வேடத்தை” அம்பலப்படுத்தியுள்ளது.
இவ்வாறான அதிரடி மற்றும் முரண்பாடான பேச்சுகள் மூலம், அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. சமூக வலைத்தளங்களின் பிரபலத்தை மட்டும் வைத்து அரசியலுக்கு வருபவர்களின் கொள்கை உறுதியற்ற தன்மையையும், சுயலாபத்திற்காக அவர்கள் எந்தப் பக்கமும் சாயத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் இந்த வியத்தகு மாற்றங்கள் நிரூபிக்கின்றன.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள், மனித உரிமை மீறல்கள், காணி சுவீகரிப்பு மற்றும் இனப்பிரச்சினைக்குரிய அடிப்படைக் காரணங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, தனிநபர் அதிகார அரசியலுக்காகவும் சலுகைகளுக்காகவும் பழைய ஆட்சியாளர்களின் நிழலில் தஞ்சமடைவது வடக்கிலும் தெற்கிலும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் சிறுபான்மைத் தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான பழைய அரசியல் தலைமைகளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் அந்தப் புதிய பிரதிநிதி தெற்கின் மேடைகளில் பாராட்டிப் பேசுவதானது, தமக்கு வாக்களித்த மக்களின் அடிப்படை உணர்வுகளையும் கடந்த கால துயரங்களையும் துச்சமாகக் கருதி இழிவுபடுத்தும் செயலாகும் என தமிழ் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன.
வடக்கில் பாரம்பரியத் தமிழ் அரசியல் கட்சிகளின் மீதிருந்த அதிருப்தியைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளக் கவர்ச்சியால் வாக்குகளைப் பெற்றவர்கள், அடுத்த தேர்தலில் தென்னிலங்கைச் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்வதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகவே பேரினவாதக் கட்சிகளுடன் கைகோர்க்கின்றனர்.
இருப்பினும், தென்னிலங்கை பாராளுமன்றப் பிரதிநிதிகள் சிலர் களுத்துறை போன்ற பகுதிகளில் வைத்து, “பழைய ஆட்சியாளர்கள் மீண்டும் வடக்கில் அதிகாரம் செலுத்துவார்கள், அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன” எனக் கூறும் கூற்றுகளை, வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்கள் கடுகளவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனமாகும்.
திரைமறைவில் வடிவமைக்கப்படும் இத்தகைய அரசியல் சித்துவிளையாட்டுக்களையும், தந்திரோபாய முயற்சிகளையும் தமிழ் மக்கள் தங்கள் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் மற்றும் கடந்த கால கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் நிராகரிப்பார்கள் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.