;
Athirady Tamil News

ஆங்கிலக் கால்வாயில் பதற்றம் ; படகு மீது ரஷ்ய போர்க்கப்பல் துப்பாக்கிச் சூடு

0

ஆங்கிலக் கால்வாயில் (English Channel) பயணித்த ஒரு படகின் மீது ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று எச்சரிக்கை நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட சொகுசுப் படகு ஒன்று, ஐக்கிய இராச்சியத்தின் கடல் எல்லைக்கு வெளியே, வைட் தீவுக்கு (Isle of Wight) தெற்கே சுமார் 20 மைல் (32 கிலோமீற்றர்) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ரஷ்ய கடற்படைக் கப்பல் ஒன்றால் சுடப்பட்டதாகக் கூறியுள்ளது.

எனினும், இந்த சம்பவத்தில் படகிற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில், ராயல் நேவியின் HMS Mersey என்ற கப்பல் குறித்த ரஷ்ய போர்க்கப்பலை கண்காணித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்களை ஆராய்ந்து வருவதாக ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்னதாக ரஷ்யாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘நிழல் கப்பல்’ ஒன்றை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் கடல் நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பிய கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.