யாழில் சட்டவிரோத தொழில் செய்த 8 பேர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து படகு மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் நேற்றைய தினம் கடற்படையினர் கடலிலும் , தரையிலிலும் சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அதன் போது கடலில், ஒளிபாய்ச்சி மீன் பிடித்தமை , சட்டவிரோத வலைகளை பாவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் ஒரு படகில் தொழிலில் ஈடுபட்ட 06 பேரையும் கைது செய்ததுடன் , அவர்களின் படகு , மீன் பிடி உபகரணங்கள் என்பவற்றையும் கைப்பற்றினர்.
அதேவேளை கரையில் நடாத்திய தேடுதல் நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து வலைகளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 08 கடற்தொழிலாளர்களையும் , அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகு , வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கடற்தொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.