நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் ; மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கையை சர்வதேச கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுப்பதற்கும் புதிய நிதிசார் திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிதி பற்றிய குழு நேற்று (02) நாடாளுமன்றத்தில் கூடியபோது, நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் முன்னிலையில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய நிதி சூழலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களைப் புதுப்பிப்பது அவசியமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இணையவழி நிதி மோசடிகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ள புதிய சட்ட ஏற்பாடுகள் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் தொடர்பான (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை நாட்டின் நிதி அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தவறான நிதிப் பரிவர்த்தனைகள் காரணமாக நாடு சர்வதேச கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றால், அது பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையிலேயே இந்த சட்டத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தினார்.