கிளிநொச்சி ஏ9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு ; ரிப்பர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்
கிளிநொச்சி ஏ9 வீதியில் இரணைமடு சந்தி முதல் பரந்தன் சந்தி வரையான பகுதியில் ரிப்பர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற வீதி விபத்துகளைத் தடுக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் கலந்துரையாடலில், பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவுறும் நேரங்களை கருத்தில் கொண்டு புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதன்படி, காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை இரணைமடு சந்தி மற்றும் பரந்தன் சந்திக்கு இடைப்பட்ட ஏ9 வீதியில் ரிப்பர் வாகனங்கள் உட்பட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று (03) கிளிநொச்சி நகரப் பகுதியில் ரிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
