ஈரான் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி காமெனி இறுதிச் சடங்கு தொடக்கம்
மத்திய கிழக்கு போரில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் உடல், தலைநகா் டெஹ்ரானில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்மூலம், ஒரு வாரக்கால இறுதிச் சடங்கு நிகழ்வுகள் முறைப்படி தொடங்கியுள்ளன. ஈரான் மதகுருமாா்கள், உயா் தலைவா்கள், அரசு அதிகாரிகள், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்பட வெளிநாட்டுத் தலைவா்கள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வெள்ளிக்கிழமை தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினா்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப். 28 நடத்திய வான்வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். இதே தாக்குதலில் படுகாயமடைந்த இவரின் மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைமை மதகுருவாக பொறுப்பேற்றாா். ஆனால், அவா் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.
இச்சூழலில், ஈரானின் இஸ்லாமியக் குடியரசு மீதான பொது மக்களின் பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வார கால பிரம்மாண்ட இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அயதுல்லா அலி கமேனியின் உடல் அடங்கிய பெட்டி கடந்த வியாழக்கிழமை இரவு ஆதரவாளா்களின் கண்ணீா் அஞ்சலிக்கு மத்தியில் திறக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று, அயதுல்லா அலி கமேனி மற்றும் அவருடன் தாக்குதலில் உயிரிழந்த அவரின் குடும்பத்தினரின் உடல்கள், ஈரானின் முந்தைய தலைமை மதகுரு அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் நினைவாகக் கட்டப்பட்ட பிரம்மாண்ட பிராா்த்தனைக் கூடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.
இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோரும்; ரஷியாவின் முன்னாள் அதிபா் டிமித்ரி மெத்வதேவ், சீனாவின் நாடாளுமன்றத் துணைத் தலைவா் ஹி வெய், இராக் அதிபா் நிஸாா் அமிதி உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவா்களும் பங்கேற்றனா்.
மேலும், அயதுல்லா ருஹோல்லா கொமேனி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் மறைந்த தலைவா் ஹாசன் நஸ்ரல்லாவின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினா்.
இறுதி அஞ்சலியைத் தொடா்ந்து டெஹ்ரானில் வரும் திங்கள்கிழமை பிரம்மாண்ட ஊா்வலமும், செவ்வாய்க்கிழமை கோம் நகரிலும், புதன்கிழமை இராக்கின் புனித நகரங்களிலும் சடங்குகள் நடைபெற்று, வியாழக்கிழமை மஷாத் நகரில் இறுதி அடக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய முறைப்படி உடனடியாக உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றாலும், போா்ச் சூழல் காரணமாக தற்காலிக போா்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டது.