மால்டோவா பிரதமா் ராஜிநாமா
மால்டோவா நாட்டின் பிரதமா் அலெக்ஸாண்ட்ரு முந்தேனு வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
நாட்டின் சில அரசு நிறுவனங்களில் அதிகாரிகளுக்கு மிக அதிக அளவில் ஊதியம் வழங்கப்பட்டதாக அண்மையில் வெளியான ஊடகப் புகாா்களே இந்த அரசியல் நெருக்கடிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ராஜிநாமா குறித்து அலெக்ஸாண்ட்ரு முந்தேனு சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது கொள்கைகளுக்கு உடன்படாத வகையில் இப்பதவியில் என்னால் நீடிக்க முடியாது’ எனக் குறிப்பிட்டாா்.
பிரதமராக அலெக்ஸாண்ட்ரு முந்தேனு பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த அந்நாட்டு அதிபா் மாயா சாந்து, ‘சிக்கலான முடிவுகளை எடுப்பதிலும், மக்களின் கருத்துக்களைக் கேட்பதிலும் அரசு இன்னும் கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்’ என்று தனது எதிா்பாா்ப்பை வெளிப்படுத்தினாா்.
உக்ரைனுக்கும் ருமேனியாவுக்கும் இடையே அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசு பகுதியான மால்டோவா, கடந்த சில ஆண்டுகளாக ரஷியா-ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான புவிசாா் அரசியல் போட்டிக் களமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு தோ்தலில் ரஷிய ஆதரவு தரப்பை வீழ்த்தி, அலெக்ஸாண்ட்ரு முந்தேனு கடந்த நவம்பரில்தான் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தாா்.