மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கானர் இயந்திரம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான சி.ரி ஸ்கானர் இயந்திரம் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அத்துடன் வைத்தியசாலயில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கும் தீர்வளிக்கப்படும் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கானர் இயந்திரம்
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனினால் கடந்த பாராளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்று (08) புதன்கிழமை நடைபெற்ற அமர்வின்போது மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு சி.ரி ஸ்கானர் இயந்திரம் இல்லை என்பதால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் நோயறிதல் செய்ய முடியாமல் போவதோடு, நீண்ட தூரப் பயணங்களினால் பல உயிர்கள் வழியிலேயே பிரியும் ஆபத்துக்கள் தொடர்வதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், நான் கடந்த 24.04.2025 அன்று மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது, ‘2026 ஆம் ஆண்டில் மன்னார் வைத்தியசாலைக்குக் கண்டிப்பாக சி.ரி ஸ்கானர் இயந்திரம் வழங்கப்படும்’ என உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருந்தேன் .
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கானர் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக மதிப்பிடப்பட்டுள்ள ரூபா 250 மில்லியன் நிதியை, இந்த 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுக்குள் வழங்குவதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.