மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநர் வீட்டில் சோதனை: ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டில் நேற்று நடைபெற்ற சோதனையின்போது, ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் டியூச்சா கிராமத்தைச் சேர்ந்த மினார் மொண்டல் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். பின்னர் அப்பணியிலிருந்து விலகிய அவர், கல் குவாரி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தனது உறவினர் துளுமொண்டலுடன் இணைந்து வர்த்தகம் செய்து வந்துள்ளார். குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதித்த அவர், ஆரடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இதுகுறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மினார் மொண்டலின் வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பல மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
அங்கு கைப்பற்றப்பட்ட பணத்தை 5 இயந்திரங்கள் மூலம் என்னும் பணி நடந்து வருவதாகவும், அது முடிந்த பின்னர் தான் கைப்பற்றப்பட்ட துல்லியமான தொகை தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, சுமார் ரூ.20 கோடி ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோதனை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அந்த வீட்டுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே, தலைமறைவாகி உள்ள துளு மொண்டலை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் கல் குவாரி வர்த்தகத்துடன் தொடர்புடைய சட்டவிரோதச் சுரங்கத் தொழில் மற்றும் அமைப்புசார் குற்றங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்த நீண்ட காலமாக போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்தான் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இது அனுமதிக்கப்படாத சட்டவிரோதச் சுரங்கங்கள் மற்றும் வருவாய் இழப்புகளுக்கு எதிரான பரவலான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு சோதனை நடத்தியபோது பல கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு அதிக அளவிலான ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.