;
Athirady Tamil News

கீரிமலையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள்: முழுமையாக அகற்றப்பட்டதாகச் செயலாளரின் பொய் அறிக்கை – வலி. வடக்கு சபை உறுப்பினர் குற்றச்சாட்டு!

0
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து, குறித்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
ஆனால் அவை முழுமையாக அகற்றப்படாது சிறிதளவே அகற்றப்பட்டுள்ளது என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ப. சாரூஜன் தெரிவித்துள்ளார்.

கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் இருந்து அவற்றை மீள அள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில் , அவற்றை மீள அள்ளுமாறு அதிகாரிகளும்  உத்தரவிட்டுள்ளனர்

இவ்வாறான நிலையில் , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் ஆபத்தான புற்றுநோய் மருத்துவ கழிவுகளும் வைத்திய சாலையின் ஏனைய கழிவுகளும் கீரிமலையில் வலி. வடக்கு பிரதேச சபையினரால் கொட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் ,அவற்றை மீள அள்ளுமாறு வலி. வடக்கு பிரதேச சபையின் செயலாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதை அடுத்து, அவற்றை மீள அள்ளிவிட்டதாக செயலாளர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் , கீரிமலை குப்பை மேட்டில் கொட்டப்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின்  சிறிதளவான கழிவுகளையே பிரதேச சபை மீள அள்ளியுள்ளது.

புற்றுநோய் நோயாளர்களுக்கான மருந்துகள் , ஊசிகள் , சேலைன் போத்தல்கள், நோயாளிகளின் பம்பஸ் , இளநீர் கோம்பைகள் , உள்ளிட்ட பலவிதமான கழிவுகள் அங்கே காணப்படுகின்றன.

அவ்வாறு இருக்க வைத்தியசாலை கழிவுகளை தாம் அகற்றிவிட்டோம் என வலி. வடக்கு பிரதேச சபையின் செயலாளர் ஒரு பொய்யான அறிக்கையை  உள்ளூராட்சி ஆணையாளருக்கு வழங்கியுள்ளார்

எனவே இது தொடர்பில் உள்ளூராட்சி ஆணையர் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் , தெல்லிப்பளை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குப்பைகளை மீள அள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு  , அவற்றினை கண்காணிக்க விசேட குழு அமைக்குமாறும் ஒருங்கிணைப்பு குழு தலைவரான  நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா பிரதேச செயலருக்கு பணித்துள்ள நிலையில் , அந்த குழு துரிதமாக செயற்பட்டு , கீரிமலை குப்பை மேட்டு பிரச்சனைகளை நேரில் ஆராய்ந்து   ,  உரிய தரப்பினருக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க  வேண்டும்  என குப்பைகளை அள்ள வேண்டும் என நேற்றைய தினம் கீரிமலை பகுதியில் கொட்டும் மழைக்குள் நடந்த போராட்டத்தில்  கலந்து கொண்ட வலி, வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.