;
Athirady Tamil News

நிந்தவூரில் வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டோருக்கு பொலிஸார் ஆப்பு- 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

0

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில்  வெள்ளிக்கிழமை (31) இரவு வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில்  ஈடுபட்ட இளைஞர்களை இலக்கு வைத்து நிந்தவூர் பொலிஸார் அதிரடிச் சோதன நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மற்றும் சட்டவிரோதமாக உருமாற்றம் (Modify) செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகப் பயணித்த இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்ததுடன், இதுவரை 5 மோட்டார் சைக்கிள்களைத் தம்வசம் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையின் போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்தமை,தலைக்கவசம்  மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை,வாகன இலக்கத்தகடுகள்  இன்றிப் பயணித்தமை,பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்றமை
உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நபர்கள் அடையாளங்காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடும் முறையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொது வீதிகளில் பிறருக்கு இடையூறாகவும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவோருக்கு எதிராக இத்தகைய அதிரடிச் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்   சுஜித் வெதமுல்லவின்  கருத்திட்டத்தின் கீழ்  உதவி பொலிஸ்  அத்தியட்சகர்  நுவான் தந்தநாராயணவின்  நெறிப்படுத்தலிலும் நிந்தவூர் பிரதேச பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி    ஏ. டபிள்யு. எஸ்  நிசாந்த வெதகே தலைமையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.