;
Athirady Tamil News

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அதிரடிப் போக்குவரத்துச் சோதனை- 187 வழக்குகள் பதிவு, 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

0

அக்கரைப்பற்று பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (31) வெள்ளிக்கிழமை மாலை விசேட போக்குவரத்துச் சட்ட அமுலாக்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இச்சோதனை நடவடிக்கையின் போது 187 போக்குவரத்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதுடன், 23 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல அவர்களின் வழிகாட்டலில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்   நுவான் தந்தநாராயண அவர்களின் நெறிப்படுத்தலிலும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  சுனில் திசாநாயக்க   ஒத்துழைப்பிலும் “போக்குவரத்துச் சட்டத்தை வலுப்படுத்தும் விசேட பணி” என்ற பெயரில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நேற்று மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 3 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்திட்டத்தில், அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று, இறக்காமம், சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது, பெரியநீலாவணை மற்றும் சவளக்கடை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 82 போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் களமிறக்கப்பட்டனர்.

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேசங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது தலைக்கவசம் அணியாமை: 98,மதுபோதையில் வாகனம் செலுத்துதல்: 01,ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல்: 14,சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல்: 07,வீதி ஒழுங்கு மீறல்: 04,சமிக்ஞை விளக்குகள் இன்றிப் பயணித்தல்: 16,வீதிச் சமிக்ஞைகளைப் பின்பற்றாமை: 05,ஏனைய போக்குவரத்து மீறல்கள்: 42 போன்றவற்றிற்கு சட்ட நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டன.

இவ்விசேட நடவடிக்கையின் போது பொதுமக்கள் பலரும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்ததுடன், விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு இவ்வாறான விசேட சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் தந்தநாராயண தெரிவித்தார்.

அத்துடன், பொதுமக்கள் அனைவரும் வீதிப் போக்குவரத்துச் சட்டங்களைச் சரியாகப் பின்பற்றி நடப்பதன் மூலம் சட்டம், ஒழுங்கு, உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாத்து, அனைவருக்கும் பாதுகாப்பான வீதிச் சூழலை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.