;
Athirady Tamil News

கீரிமலையில் குப்பை கொட்டுவது யாழ்ப்பாண நிலத்தடி நீரை நாசமாக்கும் செயல் – பொறியியலாளர் தயந்தன் எச்சரிக்கை

0
சுண்ணக்கல் அகழப்பட்ட குழிகள் நிலத்தடி நீருடன் நேரடித் தொடர்பில் உள்ளன. இன்று நாங்கள் செய்யும் பொறுப்பற்ற செயற்பாடுகள் அந்த பிரதேசம் மட்டுமல்ல சூழ உள்ள பல பிரதேசங்களின் நீர்வளத்தையும் முற்றாக நாசமாக்கி பல்வேறு புதிய பிரச்சினைகளையும் உருவாக்ககூடும் என பொறியியலாளர் திருநாவுக்கரசு தயந்தன் தெரிவித்துள்ளார்.
கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழ்ந்து பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலையே பொறியியலாளர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கீரிமலை, பகுதியில் சுகாதாரக் கழிவு நிரப்பு நிலையம் (Sanitary Landfill) அமைக்கும் திட்டம் புதியதாக உருவான ஒன்றல்ல. யாழ்ப்பாணத்தில் திறந்தவெளி குப்பைக் கொட்டுதலுக்கு மாற்றாக, அறிவியல் அடிப்படையில் திடக்கழிவுகளை இறுதியாக அகற்றும் நோக்கில், இத்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை அரசின் ஒருங்கிணைந்த திடக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் (CEA) 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில், கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியம் (Korean Economic Development Cooperation Fund – EDCF) வழங்கும் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படவிருந்த ஒருங்கிணைந்த திடக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்டத்திற்கான Keerimalai Sanitary Landfill Project குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், கீரிமலை பகுதி யாழ்ப்பாணத்தின் நகராட்சி திடக்கழிவுகளுக்கான இறுதி அகற்றுமிடமாக பரிசீலிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் 2019  காலப்பகுதியில் அந்த இடம் பொருத்தமற்றது என பல்வேறுபட்டவர்களால் பல காரணிகளால் விளக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்டது.

அந்த காலப்பகுதியில் இச்செயற்திட்டம் வலிவடக்கு பகுதியின் புவியியல் நில அமைவினடிப்படையில்,  குறித்த நிலப்பகுதி பொருத்தமற்றது என்பதை மிகத்தெளிவாக, ஆதரங்களோடு புரியவைப்பதற்காக  கீரிமலையில் ஒழுங்குசெய்யப்பட்ட அனைத்து தரப்பு பொதுக்கூட்டத்திலும் சமூக ஊடகங்களினூடும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் கீரிமலையில் குறித்த பகுதி குப்பை மேடாக்கப்படுவது வருத்தமளிக்கின்றது. நிலத்தடி நீரையும் பிரதேச வளத்தையும் நீண்ட கால அடிப்படையில் மிக மோசமாக நேரடியாக பாதிக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து தரப்பும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டியது அவசியமானது.

மேற்படி இடத்தில் சுண்ணக்கல் அகழப்பட்ட குழிகள் நிலத்தடி நீருடன் நேரடித் தொடர்பில் உள்ளன. இன்று நாங்கள் செய்யும் பொறுப்பற்ற செயற்பாடுகள் அந்த பிரதேசம் மட்டுமல்ல சூழ உள்ள பல பிரதேசங்களின் நீர்வளத்தையும் முற்றாக நாசமாக்கி பல்வேறு புதிய பிரச்சினைகளையும் உருவாக்ககூடும்.

சனநெருக்கமான பல கிராமங்கள் பாதிக்கப்படலாம். யாழ்குடாநாட்டின் புவியியல் அமைவு மற்றும் நிலத்தடி அமைப்புகளை ஓரளவேனும் அறிந்தவனாக மேற்படி செயற்பாடுகள் ஏற்படுத்தக் கூடிய கடுமையான பாதிப்புகள் தொடர்பில் உச்ச பட்ச கரிசனை எடுக்கவேண்டி உள்ளது.

திண்மக்கழிவு முகாமைத்துவம் அனைத்து பிரதேச சபைகளும் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்த சவாலை எதிர்கொள்ள பொருத்தமான இடங்களை தெரிவு செய்யவோ அல்லது பொருத்தமான முறைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கவும் துறைசார்ந்தவனாக எப்போதும் தயாராக உள்ளேன்.

எமது பிரதேச பிரச்சினைகளை எமது பிரதேசத்தை நன்கு அறிந்தவர்களாக  நாம் எல்லோரும் சேர்ந்துதான் முறையாக பொறுப்புணர்வுடன் மக்களின் பொறுப்புவாய்ந்த செயல்களூடாக தீர்க்க வேண்டும். தீர்க்கவும் முடியும்!

அந்தப் பாதையில் அரச நிர்வாக கட்டமைப்புகளை  நாம் அனைவரும் ஒழுங்குபடுத்தலாம். இவ்வாறான பிரச்சினைகளை அரசியலாக்காமல் கூட்டிணைந்த அணுகுமுறைகளூடாக துறைசார்ந்தவர்களுடனும் மக்களுடனும் பிரசேத அமைப்புகள் நிர்வாக கட்டமைப்புகளுடன் கலந்துரையாடி தீர்க்க முயல்வதே சாலச்சிறந்தது என தெரிவித்துள்ளார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.