;
Athirady Tamil News

நுவரெலியாவில் கடும் மழை ; வெள்ளப்பெருக்கு அபாயம் குறித்து எச்சரிக்கை

0

மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வானிலை மையத்தின் தகவலின்படி, மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று (01) 117.5 மில்லிமீற்றர் மழையும், லக்சபான நீர்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் 183.3 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியான மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாமிமலை ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா மற்றும் காட்மோர் ஓயா உள்ளிட்ட சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், காட்மோர், மோகினி எல்ல, மரே மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சிகளில் அதிகளவு நீர் பாய்ந்து வருவதால், அந்தப் பகுதிகளுக்கு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில், விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியுள்ளதால் அதன் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் எந்த நேரத்திலும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடும் என்பதால், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்துடன் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அலைகளின் உயரம் 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.