எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு
ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று (30) இரவு வெளியிடப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், எரிபொருள் விலை திருத்தம் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இம்முறை விலைத் திருத்தத்தின் கீழ், ஒரு லீட்டர் டீசலுக்கு 70 ரூபாய் மானியம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
அந்நிறுவனங்களின் தகவல்களின்படி, டீசல் விற்பனையில் ஒரு லீட்டருக்கு சுமார் 120 ரூபாய் முதல் 247 ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மானியம் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெரும் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஆண்டின் இறுதிக்குள் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
எனினும், டீசலுக்கு வழங்கப்படவுள்ள மானியம் பெற்றோலுக்கு வழங்கப்படாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.