அரச தரப்பில் நிலவும் நீண்ட தாமதங்கள்.. 15,000 கைதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்
நாடு முழுவதும் உள்ள 22 சிறைகளில், போதைப்பொருள் சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதங்கள் காரணமாக 15,117 சந்தேக நபர்கள் விடுதலை பெற முடியவில்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட சிறிய அபராதங்களைக் கூட செலுத்த முடியாததால், 28 சிறைகளில் உள்ள 1,940 கைதிகள் மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடரும் சிக்கல்..
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் கடுமையான நெரிசலுக்கு இந்தப் பிரச்சினைகளே முக்கிய காரணங்கள் என்று தேசிய தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு, வைத்திருத்தல் மற்றும் விற்பனைக்காகக் கைது செய்யப்பட்ட கைதிகளை மற்ற கைதிகளிடமிருந்து பிரிக்கத் தவறியதையும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
போதைப்பொருள் குற்றவாளிகள் பாதாள உலகச் செயல்பாட்டாளர்களுடன் ஒன்றாகத் தடுத்து வைக்கப்படுவதால், சிறைகளுக்குள் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்து, இது சமூகத்தில் ஒரு கடுமையான நெருக்கடியை உருவாக்க வழிவகுத்துள்ளது என்றும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.