பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திரா மரணம்; திறந்த தீர்ப்பு
பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திராவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மரணத்திற்கான உறுதியான காரணம் எதுவும் குறிப்பிடப்படாத ‘திறந்த தீர்ப்பு’ (open verdict) வழங்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனையின் போது அவரது உடலில் வெளிப்புற அல்லது உட்புறக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், மேலதிக விசாரணைகளுக்காக அவரது உடலின் மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடலின் மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை
மாடல் அழகியான சுலா பத்மேந்திரா குமாரபதிரன, ஆகஸ்ட் 31 அன்று பிலியந்தலை, தும்போவில, கங்காராம வீதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இறப்பு தொடர்பான விவரங்களை பிலியந்தலை பொலிஸார் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, பதில் நீதவான் சுனேத்ரா பெரேரா சம்பவ இடத்தையும் சடலத்தையும் பார்வையிட்டார்.
மேலும், சடலத்தை கலுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறும், நீதிமன்ற மருத்துவ அதிகாரி (JMO) மூலம் பிரேதப் பரிசோதனை நடத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அதற்கிணங்க, நீதிமன்ற மருத்துவ அதிகாரி மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார். முந்தைய நாள் இரவு பத்தரமுல்ல பகுதியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வுக்குப் பிறகு, ஆகஸ்ட் 31 அன்று அதிகாலை 5.00 மணியளவில் அந்தத் தொழிலதிபருடன் பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து உறங்கச் சென்றதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்று மதியம் 12.45 மணியளவில் அவரை எழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காததால் ‘1990’ அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் பரிசோதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அவரைப் பரிசோதித்த சுகாதாரப் பணியாளர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இருப்பினும், படுக்கை விரிப்பில் இரத்தக் கறை இருந்ததால், அந்தத் தொழிலதிபர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்தார். இறந்த மாடல் அழகியின் தாயாரும் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்;
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், அவரது மரணத்தைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிய பல்வேறு நினைவுகளும் பதிவுகளும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இவை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, கண்ணியத்தைக் காக்குமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.