மருத்துவமனையில் தவறான மருந்தா… இளைஞர் உயிரிழப்பு; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட மருந்துகள் தொடர்பில் சந்தேகங்கள்
உயிரிழந்த இளைஞரின் உடலம் தொடர்பான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறுகையில்,
இளைஞரின் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை எனவும், அவரது உடல்நிலைக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அட்டை மற்றொருவருடையது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவமனை ஊழியர்களால் மருத்துவ அட்டை தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.