;
Athirady Tamil News

அமெரிக்காவில் நூதன கொள்ளை: 40,000 பவுண்ட் பீர் திருட்டு – தகவல் கொடுத்தால் சன்மானம் என நிறுவனம் அறிவிப்பு

0

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பீர் விற்பனை மையத்தில் இருந்து சுமார் 40,000 பவுண்ட் (18,000 கிலோவிற்கும் அதிகம்) எடையுள்ள பீர் பாட்டில்கள் மற்றும் கேன்கள் மர்மமான முறையில் திருடப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ‘பாப்ஸ்ட் புளூ ரிப்பன்’ நிறுவனத்திற்கு சொந்தமான, பீர் சரக்கை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அந்நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

போலி ஆவணங்கள்
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவின் மாண்ட்லெயார் பகுதியில் ‘அன்ஹியூசர்-புஷ்’ பீர் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மர்ம நபர்கள் சிலர், பீர் லோடை ஏற்றிச் செல்ல வந்த துணை ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் போல நடித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

ஒரே நாளில் 2 முறை கொள்ளை
இதையடுத்து காலை 10 மணியளவில் அரிசோனா நோக்கிச் செல்ல வேண்டிய சுமார் $45,000 மதிப்புள்ள பீர் லோடு மர்ம நபர்களால் லாரியில் ஏற்றி செல்லப்பட்டன. பின்னர் அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில், சான் டியாகோ செல்ல வேண்டிய $25,000 மதிப்புள்ள சுமார் 33,984 பீர் கேன்கள் (1,602 கேஸ்கள்) அதே போலி ஆவணங்கள் மூலம் கடத்தப்பட்டன. மொத்தமாக $70,000 (சுமார் இந்திய மதிப்பில் ரூ.58 லட்சம்) மதிப்பிலான பீர் சரக்குகள் ஒரே நாளில் கொள்ளையடிக்கப்பட்டன.

சமூக ஊடகங்களில் நிறுவனத்தின் விளம்பரம்
இந்த திருட்டுச் சம்பவத்தை அடுத்து, பீர் தயாரிப்பு நிறுவனமான பாப்ஸ்ட் புளூ ரிப்பன் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருடர்களுக்கு ஒரு சுவாரசியமான நிபந்தனையை விதித்துள்ளது. அதில், “திருடரே… உங்களிடம் இவ்வளவு பீர் இருப்பதை உங்கள் நண்பர்களிடம் பெருமையாகக் காட்ட நினைப்பதில் எங்களுக்குத் தவறாகத் தெரியவில்லை. ஆனால், அதை நீங்கள் நேர்மையான வழியில் பெற்றிருக்கலாம்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், திருடிய பீரை எவ்வித கேள்விகளும் கேட்காமல் ஒப்படைக்க 18 நாட்கள் 44 நிமிடங்கள் கெடு விதித்து ஒரு கவுண்ட்டவுன் கடிகாரத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். “பீர் சூடாகி வருகிறது… திருடர்களின் தடயம் குளிர்ந்து வருகிறது, நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது” என அந்த நிறுவனம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.

சரக்கை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

போலீசார் தீவிர விசாரணை
இந்த சம்பவம் ஏதோ விளம்பர யுக்தி என பொதுமக்கள் நினைத்த நிலையில், மாண்ட்லெயார் போலீசார் இது உண்மையான திருட்டு தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 2 திருட்டு சம்பவங்களும் ஒரே திட்டமிட்ட நெட்வொர்க்கால் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில், விற்பனை மையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் திருடர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.