பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் கட்டாயமாக்க உள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் ஒவ்வொரு 5,000 கிலோமீற்றருக்கு ஒருமுறையோ அல்லது 3 மாதங்களுக்குள்ளோ அடிப்படை வாகன தகுதிப் பரிசோதனை சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 3 மாதங்களுக்கு ஒருமுறை வாகனத்தின் அடிப்படைப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் அங்கீகரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் பேருந்துகள், வேன்கள், பாடசாலை வேன்கள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் உட்பட பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
எனினும், சொந்த பயன்பாட்டுக்கான தனிநபர் (தனியார்) வாகன உரிமையாளர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. இந்த வாகனப் பரிசோதனையை பொதுவாக 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரையிலான கட்டணத்தில் செய்ய முடியும்.
அண்மைக்காலமாக இடம்பெற்ற பல வீதி விபத்துக்களில் பயணிகள் பேருந்துகளின் பிரேக் (Brake) அமைப்பு முறையாகப் பராமரிக்கப்படாமையே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த கால விபத்து அறிக்கையொன்றில், பேருந்தின் ஒரு பக்க பிரேக் ஒரு வருடம் முழுமையாகச் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவே சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் இத்தகைய கவனக்குறைவுகளால் பலரின் உயிர்கள் விபத்துக்களில் பறிபோகின்றன என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், என்.வீ.க்யூ தகுதி பெற்ற தொழில்வல்லுநர்கள் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட வாகன பராமரிப்பு நிலையங்களில் இந்த வாகனப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் அத்தகைய தொழில்வல்லுநர்கள் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.