;
Athirady Tamil News

ஜப்பானில் 5-வது முறையாக ஐபோனைத் தொலைத்த இந்தியப் பெண்: தொடரும் அதிசயம்!

0

டோக்கியோ,

ஜப்பானில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவர், தனது ஐபோன் 16 புரோ செல்போனை 5-வது முறையாக தொலைத்துவிட்டு, அதை எவ்வித சேதமும் இன்றி அதே இடத்தில் மீண்டும் கண்டெடுத்துள்ளார்.

நள்ளிரவு தேடல்
இந்தியாவைச் சேர்ந்த பெண் பிரகதி. இவர் ஜப்பானில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணியளவில், தனது விலைமதிப்பற்ற ஐபோன்16 புரோ செல்போன் காணாமல் போனதை பிரகதி உணர்ந்துள்ளார். பதற்றமடைந்த அவர், தனது ஆப்பிள் வாட்ச் மற்றும் ‘எனது போனைக் கண்டுபிடி’ செயலி மூலம் போன் இருக்கும் இடத்தை டிராக் செய்துள்ளார். போன் கடைசியாக ஒரு பொது இடத்தைக் காட்டியுள்ளது.

அதிசய நிகழ்வு
அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, அவரது ஐபோன் பல மணி நேரங்களாக யாராலும் தொடப்படாமல், அவர் விட்டு சென்ற அதே இடத்தில் அப்படியே பத்திரமாக இருந்துள்ளது. நள்ளிரவு நேரத்திலும் பொது இடத்தில் ஒரு விலையுயர்ந்த போன் திருடப்படாமல் இருந்தது அவரை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியது.

இது முதல் முறையல்ல
இதற்கு முன்பும் பிரகதி ஜப்பானில் 4 முறை தனது போனைத் தொலைத்துள்ளார். காய்கறி சந்தை, காவல் நிலையம் மற்றும் 2 முறை துணிக்கடைகளின் ட்ரையல் ரூம் போன்ற இடங்களில் அவர் போனைத் தவறவிட்டபோதும், அவை அனைத்தும் ஜப்பானியர்களின் நேர்மையால் அவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன.

வீடியோ வைரல்
“இது ஜப்பானில் மட்டுமே சாத்தியம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்நாட்டின் கடுமையான சட்ட ஒழுங்கு, மிகக் குறைந்த குற்ற விகிதம் மற்றும் மக்களின் ஒழுக்கமே இதற்கு பிரதான காரணம் என நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். ஜப்பானியர்களின் அசாத்திய நேர்மையை வியந்து அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.