;
Athirady Tamil News

சவப்பெட்டியிலிருந்து உயிருடன் எழுந்த மூதாட்டி — 2 நாட்களுக்குப் பின் மீண்டும் மரணம்!

0

பெய்ஜிங்,

சீனாவில் இறந்துவிட்டதாக கருதப்பட்டு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட 70 வயது மூதாட்டி ஒருவர், மறுநாள் திடீரென உயிர் பிழைத்து கண்விழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த அதிசயம் நீண்ட நேரம் நீடிக்காமல், அடுத்த 2 நாட்களில் அவர் நிரந்தரமாக உயிரிழந்தார்.

புற்றுநோய் பாதிப்பு
வட சீனாவின் ஹெபெய் மாகாணம், சாங்ஜோவ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூளைத் தமனி இரத்த உறைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அத்துடன் அவருக்கு புற்றுநோய் பாதிப்பும் தீவிரமடைந்ததால், இனி சிகிச்சை பலனளிக்காது எனக் கூறி மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

மரணமடைந்ததாக முடிவு
இதையடுத்து கடந்த 8-ந்தேதியன்று, அந்த மூதாட்டியின் உடலில் எந்தவித அசைவோ, உயிர் இருப்பதற்கான அறிகுறிகளோ இல்லாததைக் கண்டு அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் முடிவு செய்தனர். வெளியூரில் இருக்கும் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வரும் வரை உடலைப் பாதுகாக்க, அவரை மின்சாரத்தால் இயங்கும் ஒரு குளிரூட்டப்பட்ட சவப்பெட்டிக்குள் வைத்தனர். அதிர்ஷ்டவசமாக, அந்த சவப்பெட்டி உடல் உறையும் நிலைக்கு வைக்கப்படாமல், சாதாரண குளிர்ச்சியூட்டும் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தம்
மறுநாள் 9-ந்தேதி மாலை, சவப்பெட்டியின் அருகே இருந்த அவரது மருமகள் உள்ளிருந்து ஏதோ லேசான முனகல் சத்தம் வருவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, மூதாட்டி சுவாசித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. பதறியடித்த உறவினர்கள் அவரை உடனடியாக வெளியே எடுத்தனர். கடந்த செப்டம்பர் 11 அன்று உறவினர்கள் அனைவரும் வந்தபோது, மூதாட்டி முழுமையாகக் கண்விழித்துப் பார்த்தார். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரால் பேசவோ, உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளவோ முடியவில்லை.

மீண்டும் மரணம்
இந்த நிலையில், கண்விழித்த 2 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 11-ந்தேதி இரவே அவர் மீண்டும் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, செப்டம்பர் 13-ந்தேதி அன்று அவரது இறுதிச் சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவர்களின் விளக்கம்
இந்த விசித்திரமான சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், இது “தோற்ற மரணம்” என்ற நிலை, என்று விளக்கமளித்தனர். மிக மோசமான உடல்நலக் குறைபாட்டின் போது, ஒரு நபரின் இதயம் மற்றும் சுவாசத் துடிப்பு வெளியில் தெரியாத அளவுக்கு மிக மிக பலவீனமடைந்து, வளர்சிதை மாற்றமும் தற்காலிகமாக நின்றுவிடும்.

ஆஸ்பத்திரி மூலம் முறையான மரண சான்றிதழ் பெறாமல், உறவினர்களே மரணத்தை உறுதி செய்ததால் இந்த தவறு நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான பதிவுகள் சீன சமூக வலைதளமான ‘டொயின்’ தளத்தில் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.