;
Athirady Tamil News

சம வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள்; டாஸ் போட்டு முடிவு அறிவிப்பு- அமெரிக்க தேர்தலில் சுவாராசியம்

0

வாஷிங்டன்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு பெண் வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றதால், டாஸ் போட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்ட சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புளோரிடா மாகாணத்தின் அட்லாண்டிக் பீச் நகர கமிஷனர் பதவிக்கான தேர்தல் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதில் ஜெனிபர் லாக்னர் , லிசா ஹெரால்டு ஆகிய இருவரும் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணப்பட்டபோது இருவரும் தலா 3,162 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் மறுவாக்கு எண்ணிக்கையும் நடத்தினர். அதிலும் முடிவு மாறவில்லை.

இதனால் புளோரிடா மாகாண சட்டத்தின்படி, நாணயத்தைச் சுண்டிப்போட்டு வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி ஜாக்சன்வில்லில் உள்ள டுவால் கவுண்டி தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இரு வேட்பாளர்களும் பங்கேற்றனர். சிறந்த 3 சுற்றுகளில் 2 சுற்றுகளில் வெற்றி பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என விதிமுறை வகுக்கப்பட்டது.

முதலில் லிசா ஹெரால்டு டாஸ் போடும் போது தலை விழும் எனத் தேர்வு செய்தார். ஆனால், பூ விழுந்ததால் ஜெனிபர் லாக்னருக்கு முதல் வெற்றி கிடைத்தது. தொடர்ந்து 2-வது சுற்றில் ஜெனிபர் லாக்னர் தலை விழும் எனத் தேர்வு செய்தார். இந்த முறை அவர் கணித்தபடியே தலை விழுந்தது. இதனால் தொடர்ந்து 2 சுற்றுகளிலும் வெற்றி பெற்ற ஜெனிபர் லாக்னர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் வெறும் 20 விநாடிகளில் முடிவடைந்தது. இதையடுத்து, வெற்றி பெற்ற ஜெனிபர் லாக்னருக்கு வாழ்த்துகள் குவிந்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லிசா ஹெரால்டும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். புளோரிடா மாகாண சட்டத்தின்படி, தேர்தலில் சம வாக்குகள் கிடைத்தால் டாஸ் போட்டு அதிர்ஷ்ட முறைகள் மூலம் வெற்றியாளரைத் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.