இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா!
இந்தோனேசியாவின் மலுக்கு தீவுகளுக்கு அருகிலுள்ள பண்டா கடற்பகுதியில் இன்று (21) 7.2 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் புவியியல் ஆராய்ச்சி நிலையமான GFZ வெளியிட்ட தகவலின்படி, கிழக்குத் திமோரின் தலைநகரான டிலி நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 226 கிலோமீற்றர் தொலைவில் பண்டா கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு பாதிப்பில்லை
கடலுக்கு அடியில் சுமார் 117 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையமான INCOIS வெளியிட்ட தகவலின்படி, இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 3.12 மணியளவில் பண்டா கடற்பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 79 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு மற்றும் ஆழம் தொடர்பில் இரு ஆய்வு நிலையங்களும் வெவ்வேறு மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.