;
Athirady Tamil News

பாகிஸ்தான் எல்லையில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: மத்திய அரசு திட்டம்

0

ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யவிருக்கும் 5-ஆவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை, ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையையொட்டி நிலைநிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இது நிலைநிறுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவிடம் தற்போது 4 எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. எதிரிகளின் பாலிஸ்டிக் ஏவுகணைகள், போா் விமானங்கள், தாக்குதல் ட்ரோன்கள், பிற வான்வழி ஆயுதங்களை நடுவானிலேயே தடுத்து முறியடிக்கும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தானுடன் கடந்த ஆண்டு நடந்த ராணுவ மோதலில் முக்கிய பங்காற்றியது.

பாகிஸ்தானின் போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன், அந்நாட்டின் ஒரு ஏவுகணைகூட இந்தியப் பகுதியைத் தாக்காமல் பாதுகாக்கப்பட்டது.

இந்தியாவிடம் உள்ள 4 எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளில் மூன்று அமைப்புகள் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மற்றொரு அமைப்பு, அருணாசல பிரதேச எல்லைப் பாதுகாப்புக்காக அஸ்ஸாமில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ள 5-ஆவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை ஜம்மு-காஷ்மீரில் உள்ள 740 கி.மீ. தொலைவுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலைநிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

‘அடுத்த மாதம் இந்திய விமானப் படை குழுவினா் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டு, எஸ்-400 பாதுகாப்பு அமைப்பில் இறுதிக்கட்ட பரிசோதனையை மேற்கொள்வா். அதைத் தொடா்ந்து, அந்த அமைப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் ஜம்மு-காஷ்மீா் எல்லையில் நிலைநிறுத்தப்படும்’ என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த ஆண்டில் ரஷியாவிடம் இருந்து மேலும் 5 எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா கொள்முதல் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.