;
Athirady Tamil News

பொலிஸாருக்காகக் காத்திருக்காமல் விபத்தில் சிக்கியவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கலாம்!

0
விபத்தில் காயமடைந்தவரை உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதியுங்கள். அதனால் எந்த விதமான சட்ட ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள தேவையில்லை என  சாவகச்சேரி பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.  
 யாழ்ப்பாண மருத்துவச் சபையுடன் இணைந்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயலமர்வை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடாத்தியது.
குறித்த செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
 ‘விபத்துக்கள் நடந்தவுடன் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லாது பலர் பொலிஸ் வரும்வரை காத்திருக்கிறார்கள்.
நீங்கள் விபத்து நடந்த இடத்தைச் சரியாக அடையாளப்படுத்திவிட்டு, அதனை உங்கள் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துவிட்டுக் காயமடைந்தவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலாம். அதனால் சட்டரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை’ எனத் தெரிவித்தார்.
அதேவேளை குறித்த செயலமர்வில் வளவாளராக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியுமான பேராசிரியர் உருத்திரபசுபதி மயூரதன் கருத்து தெரிவிக்கையில்,
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடற்கூற்றுப் பரிசோதனை செய்வது குறித்து உறவினர்கள் பலர் எம்மிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.
இப் பரிசோனையை நாங்கள் சட்டத்தின் தேவை கருதி மட்டுமே செய்கின்றோம்.  பொலிஸ் தரப்பின் சட்டரீதியான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான தேவைப்படுவதால்தான் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
உடற்கூற்றுப் பரிசோதனையினைச் செய்யுமாறு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி அல்லது நீதிபதி உத்தரவிடுவார் அதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.