இலங்கையில் ஆண்டு தோறும் 38 ஆயிரம் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் , அதில் சுமார் 300 சிறுவர்கள் வரையில் உயிரிழக்கின்றனர் என குழந்தை மருத்துவ நிபுணருமான பேராசிரியர் பாலசுப்பிரமணியம் சயந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மருத்துவச் சபையுடன் இணைந்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயலமர்வை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடாத்தியது.
அதில் வளவாளராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உலக வங்கியின் மதிப்பீட்டின் அடிப்படையில் இலங்கையில் ஆண்டுதோறும் அண்ணளவாக 38 ஆயிரம் வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றன.
அவற்றின் மூலம் மூவாயிரம் பேர்வரை உயிரிழக்கின்றார்கள். அவர்களில் முந்நூறு பேர் வரை சிறுவர்கள், எட்டாயிரம் பேர் வரை கடுமையான காயங்களுக்கு உள்ளாகின்றனர்
கடுமையான காயங்களுக்கு உள்ளாகுபவர்களில் ஒருவருக்குச் சத்திரசிகிச்சைக்காக அரசாங்கம் ஐந்து இலட்சம் ரூபா முதல் பதினைந்து இலட்சம் ரூபா வரை செலவிடுகிறது, சராசரியாக விபத்து நோயாளி ஒருவருக்கு ஒரு நாளைக்கு மூன்று இலட்சம் ரூபா நிதியை அரசாங்கம் செலவிடுகிறது என தெரிவித்தார்.
இதன்போது கருத்துரைத்த யாழ். மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர்,
இலங்கையில் சராசரியாக தினசரி 8 பேர் வீதி விபத்துக்களால் உயிரழப்பதாகக் குறிப்பிட்டார். ‘நாம் ஒவ்வொருவரும் சாரதிகள் என்ற அடிப்படையில் எமது வாகனங்களைக் கவனமாகக் கையாளவேண்டும். வாகனங்களைப் பழுதுபார்க்கவேண்டும்; ரயர்கள் தேய்ந்தவுடன் மாற்றவேண்டும்; தினசரி வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது பிறேக் முறையாக வேலை செய்கின்றதா எனப் பார்க்கவேண்டும். இவற்றைச் செய்தாலே கணிசமான அளவு வீதி விபத்துக்களைக் குறைக்கமுடியும்’ எனக் குறிப்பிட்டார்.