;
Athirady Tamil News

கீத் நொயர், போதல ஜயந்த கடத்தல் குறித்து தனக்குத் தெரியாது என மன்றில் கோட்டாபய பதில்:

0
கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களான கீர்த்தி நொயர் , போதல ஜயந்த ஆகியோர் தொடர்பில் தனக்கு விளக்கமில்லை, தெரியாது, ஞாபகம் இல்லை போன்றவற்றையே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்சே நீதிமன்றில் பதில் அளித்தார். 
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பிலான வழக்கு விசாரணையின் மேலதிக சாட்சி பதிவு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது,  கொழும்பு பிரதான நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி தனது சாட்சியங்களை பதிவு செய்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
குறித்த விசாரணையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் , கீர்த்தி நொயர் , போதல ஜயந்த ஆகியோர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கேள்விகளை எழுப்பினர்.
அதன் போதே தனக்கு தெரியாது, ஞாபகம் இல்லை , விளக்கம் இல்லை போன்றவற்றை தெரிவித்தார்.
குறித்த ஊடகவியலாளர்கள் கடத்தல் சம்பவம் தொடர்பில் , பந்துல பத்மகுமார என்கிற ஊடகவியலாளர் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் உங்களை பாதுகாப்பு செயலகத்தில் சந்தித்தார்கள் தானே ? என கேட்ட போது, 2009ஆம் ஆண்டு என்பது நீண்ட காலம். அது தொடர்பில் ஞாபகம் இல்லை என்றார்.
அதேபோல், கீர்த்தி நொயர் , போதல ஜயந்த ஆகியோர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா ? என்ற கேள்விக்கும் , அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் எனக்கு நேரடியாக அறிவிக்கப்பட மாட்டாது. பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கலாம் என கோட்டாபய பதில் அளித்தார்.
குமார் குணரத்தினம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலும் , அவுஸ்ரேலிய தூதரகம் தலையிட்ட பின்னரே அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் ஞாபகம் இல்லை என்றே கோட்டாபய பதில் அளித்தார்.
அதனை தொடர்ந்து மேலதிக சாட்சி பதிவுக்காக வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி.
கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்கால் பகுதியில் வைத்து 09ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதனை அடுத்து லலித் மற்றும் குகன் ஆகியயோரின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீடடு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.

அந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளின் போது கடந்த 2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , கோத்தபாய ராஜபக்ச மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு மன்று உத்தரவிட்டது.

பாதுகாப்பு காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என தொடர்ச்சியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைகளின் போது, கோத்தபாய ராஜபக்ச நிகழ்நிலை (online) ஊடாக தோன்றி மன்றில் சாட்சியம் அளிக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதனை அடுத்த, கோத்தபாய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது

இந்நிலையில் குறித்த வழக்கு கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  கோட்டாபய ராஜபக்சே கொழும்பு நீதிமன்றில் முன்னிலையாகி , அங்கிருந்து நிகழ்நிலை ஊடாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தோன்றி தனது சாட்சியங்களை பதிவு செய்தார்.

அதனை தொடர்ந்து மேலதிக சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கு நவம்பர் 27ஆம் திகதிக்கு திகதியிடப்பட்ட நிலையில் வழக்கு 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை  யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது
அதன் போது கோட்டபாய கொழும்பு பிரதான நீதிமன்றில் முன்னிலையாகி நிகழ் நிலை ஊடாக யாழ்.நீதவான் நீதிமன்றுக்கு சாட்சியம் அளித்தார்.

அதனை தொடர்ந்து மிகுதி சாட்சியங்கள் , அது தொடர்பிலான ஆவணங்களை சமர்ப்பிக்கவென எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.