;
Athirady Tamil News

கொக்கிளாய் பாலம் வடக்கு, கிழக்கு சுற்றுலா துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்: ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை!

0
வடக்கு – கிழக்குக்கு இடையிலான கொக்கிளாய்–புல்மோட்டை இணைப்புப் பாலத் திட்டம் இரு மாகாணங்களுக்கிடையிலான சுற்றுலா, போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள சுற்றுலாச் சேவை வழங்குநர்களுடனான கலந்துரையாடல், இன்றைய தினம் சனிக்கிழமை இரவு சுற்றுலாப் பணியக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு – கிழக்குக்கு இடையிலான கொக்கிளாய்–புல்மோட்டை இணைப்புப் பாலத் திட்டம் இரு மாகாணங்களுக்கிடையிலான சுற்றுலா, போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்

பாலம் அமைக்கும் பணிகள் 2027ஆம் ஆண்டு ஆரம்பித்து, 2029ஆம் ஆண்டில் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு–கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான பயண நேரமும் இடைவெளியும் கணிசமாகக் குறைவதுடன், சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்

கிழக்கில் திருகோணமலை, நிலாவெளி, பாசிக்குடா, அறுகம்பே போன்ற இடங்கள் ஏற்கனவே சர்வதேசச் சுற்றுலாவிகளிடையே நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ளன

அந்த அனுபவங்களிலிருந்து வடக்கு மாகாணம் கற்றுக்கொள்ள விரும்புகிறது, கிழக்கு மாகாணச் சேவை வழங்குநர்கள் தமது அனுபவங்களையும் சேவை நுட்பங்களையும் வடக்கு மாகாணத்தினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்

அதேவேளை, வடக்கு மாகாணத்துக்கும் தனித்துவமான சுற்றுலா வளங்கள் உள்ளன. நல்லூர் ஆலயம், யாழ்ப்பாணக் கோட்டை, கீரிமலை நகுலேஸ்வரம், மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்ற வரலாற்று மற்றும் ஆன்மீகத் தலங்கள்; நெடுந்தீவு, நயினாதீவு, காரைநகர் கசூரினா கடற்கரை போன்ற தீவுசார் மற்றும் கடற்கரைப் பகுதிகள்; சுண்டிக்குளம், மன்னார் வங்காலை போன்ற இயற்கை மற்றும் பறவைகள் அவதானிப்புக்குப் பொருத்தமான இடங்கள்; வடக்கின் பாரம்பரிய உணவு வகைகள், பனைசார் உற்பத்திகள் மற்றும் கைவினைப் பொருட்கள் எனப் பல்வேறு அனுபவங்களைச் சுற்றுலாவிகளுக்கு வழங்க முடியும்

குறிப்பாக, இந்தியாவிலிருந்து, அதிலும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ஆன்மீகச் சுற்றுலாவிகளைக் கவர்வதற்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளன.
விமானம் மற்றும் கடல்வழி இணைப்புகள் ஊடாக வடக்குக்கு வருகின்ற சுற்றுலாவிகளை நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்களுக்கு அழைத்துச் செல்வதுடன், அங்கிருந்து திருகோணமலையிலுள்ள திருகோணேச்சரத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஆன்மீகச் சுற்றுலாப் பொதிகளை உருவாக்க முடியும்
இவ்வாறு வரும் சுற்றுலாவிகள் வடக்கில் மேலதிகமாக இரண்டு நாட்கள் தங்குவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்

அதேபோன்று, வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளை கிழக்கு மாகாணத்துக்கும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு மாகாணத்தின் சுற்றுலா அனுபவத்தை மற்றைய மாகாணத்துக்கும் கொண்டு செல்லக்கூடிய புதிய சந்தை உருவாகும் என ஆளுநர் தெரிவித்தார்

அதனை தொடர்ந்து, கிழக்கு மாகாண சுற்றுலாசார் சேவை வழங்குநர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அறுகம்பே உலகப் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாக இருந்தபோதும் அது ஒரு பருவகாலத்துக்குரியது. எனவே, வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணமும் கைகோர்ப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையில் நிலைபேறான தன்மையை உருவாக்க முடியும்
அத்துடன் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையில் இல்லாத புதிய விடயங்கள் பலவற்றை இங்கு பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.