;
Athirady Tamil News

இலங்கையில் இருந்து ஈழ தமிழரை புலம்பெயர் நாடுகளுக்கு கடத்தும் மற்றுமொரு திட்டம்

0

ஈழத் தமிழர்கள் தாம் இழந்து போன இறைமையை மீட்டெடுப்பதற்காக நடாத்திய ஆயுதப் போராட்டத்தில் தமிழ் இனத்தின் கொள்ளளவுக்கு மிஞ்சிய அளப்பெரும் தியாகங்களை செய்தார்கள், சொல்லொணா துன்பங்களை சுமந்தார்கள்.

ஈற்றில் முள்ளிவாய்க்காலில் போரவலத்தையும், பேரழிவையும் சந்தித்து போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் சர்வதேச ரீதியாக தமிழ் மக்கள் ஓர் அரசியல் போராட்டத்தை நடத்தவும், சர்வதேச தலையீடுகளுக்கு ஊடாக தமக்கான நீதியைப் பெறுவதற்குமான வாய்ப்புகள் தொடர்ந்தும் இருக்கின்றன.

ஆனாலும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு தமிழ் மக்கள் தமது தாயக பூமியில் தொடர்ந்து வாழ்ந்திட வேண்டும்.

இல்லையேல் தமிழ்மக்கள் தமது தேசிய அபிலாசையை வென்றெடுக்க முடியாது. அத்தகைய ஒரு துயரமான நிலை இப்போது தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

அதுதான் ஈழத் தமிழரை நலிந்து போகச் செய்யும் ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஈழத் தமிழரை தாய் நிலத்திலிருந்து அகற்றி வெளிநாடுகளில் குடியேறச் செய்யும் நாசகார திட்டம்.

சிங்கள பௌத்தத்தின் புனித நூலான மகாவம்சத்தில் வெளிப்படுத்தப்படும் “தம்தீப கோட்பாடு” என்பது இலங்கையை முற்று முழுதாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவது.

இதன் அடிப்படையிற்தான் இன்று இலங்கையின் பௌத்த பேரினவாதம் உலகளாவிய அரசியலில் மிகத் தந்திரமாக காய்களை நகர்த்தி வருகின்றது.

அதன் அடிப்படையில் வட-கிழக்கில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் வாழும் வரைக்கும்தான் இலங்கை தீவில் இந்தியாவின் தலையிடும் செல்வாக்கம் இருக்கும். இதனாற்தான் ஈழத் தமிழர்களை சிங்களப் பேரினவாதம் இனப்படுகொலை செய்கிறது. அதன் மூலம் இலங்கை தீவில் இருந்து ஈழத் தமிழர்களை வெளியேற்ற முயல்கிறது. இந்தியத் தலையீட்டை தடுக்கவும் திட்டமிடுகிறது.

புவிசார் அரசியல்
இந்தப் பூமிப் பந்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தமது வாழ்வுக்காக இயற்கையுடன் இடையூறாது போராடுகின்றன.

மனிதனும் ஒரு ஜீவராசி என்ற அடிப்படையில் அவன் இயற்கையுடன் மாத்திரம் அல்ல மனித சமூகத்திற்கு இடையேயும் ஓயாது போராட வேண்டியுள்ளது.

ஜீவராசிகள் இடத்துக்காக போராடுகின்றன, உணவுக்காக போராடுகின்றன, பாலியல் இனச் சேர்க்கைக்காக போராடுகின்றன. இவை ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவை.

ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. எனினும் இடத்திற்கான (நிலத்திற்கான) போராட்டமே அதி முக்கியத்துவம் வாய்ந்தது. தனது இருப்பிடத்தை இழந்து எந்த ஜீவராதியும் நிலைபெற முடியாது. அந்த அடிப்படையில் பிராணிகளும்சரி மனிதனும்சரி தன்னுடைய இடத்தினை பாதுகாப்பதற்கான போராட்டமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

சிங்கங்கள் தாம்வாழும் பிரதேசத்துக்குள் மாற்று சிங்கக் கூட்டங்கள் நுழைவதை அனுமதிக்காது. காகங்களும் அப்படித்தான். சிறிய குருவிகளும் தங்கள் கூட்டை நோக்கி புழு பூச்சி பிராணிகள் வருவதையும் அனுமதிக்காது. புழுக்கள்கூட தம்முடைய கூட்டை பாதுகாப்பதற்காகவே போராடும்.

ஆக ஒவ்வொன்றும் தான் வாழும் சூழலை பாதுகாப்பதற்கு உயிர்கள் அனைத்தும் போராடுகின்றன. தான்வாழும் சூழலின் எல்லைகளை வகுத்து அவை தமக்கான ஒரு பாதுகாப்பு வளையத்தை வடிவமைத்துக் கொள்கின்றன.

இத்தகைய உயிரிகளின் பாதுகாப்பு வளையம்தான் இன்று உலகளாவிய அரசியலில் புவிசார் அரசியல் என அழைக்கப்படுகிறது. எனவே இலங்கையின் அமைவிடம் காரணமான நிலைபெற்று இருக்கின்ற புவிசார் அரசியலை மாற்றி அமைப்பதற்கு கையாளப்படுகின்ற முறியடிப்பு தந்துரோபாயம்தான் சிங்கள குடியேற்றம், நிலஅபகரிப்பு என்பவற்றை உள்ளடக்கிய அரசியல் புவியியல் ஆகும்.

அரசியல் புவியியல்
இயற்கையாக இருக்கின்ற நிலைமைகளை தமது அரசியல் தேவைக்காக மாற்றி அமைத்து புதிய சூழல் ஒன்றை தோற்றுவிப்பதுதான் அரசியல் புவியியலாகும்.

உதாரணமாக ஆபிரிக்க கண்டத்தைச் சுற்றி இந்து சமுத்திரத்திற்கு வருவதற்கான பாதையை சுயஸ் நிலத்தொடரை வெட்டி மத்தியதரக் கடலையும் செங்கடலை இணைப்பதன் ஊடாக குறுகிய நேரத்துக்குள் இந்து சமுத்திரத்துக்கு வருவதான பாதை தோற்றுவிக்கப்பட்டது.

இது ஒரு அரசியல் புவியியல். அவ்வாறே ஆஸ்திரேலியா கண்டத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகளை அழித்து ஆங்கிலேயர்களை குடியேற்றியதன் மூலம் ஆங்கிலேய அவுஸ்திரேலியா தோற்றுவிக்கப்பட்டது.

அவ்வாறே அமெரிக்க கண்டங்களும் ஐரோப்பியர்களால் அங்கு வாழ்ந்துவந்த செவ்விந்தியர்களை அழித்து அமெரிக்க நாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. அவ்வாறே கிருமியாவில் பெருந்தொகை ரஷ்யர்களை குடியேற்றியதன் மூலம் உப்ரைனிடமிருந்து கிருமியா பறிக்கப்பட்டுவிட்டது.

இதுவும் அரசியல் புவியியல் என்பதற்குளே அடங்கும். திபேத்தில் பெருந்தொகை சீனர்களை குடியேற்றி தீபத்தின் குடுத்தொகையில் சீனர்களின் தொகையை அதிகரிக்கச் செய்ததும் அரசியல் புவியியல் என்பதற்குள்ளே அடங்கும்.

அவ்வாறே இலங்கை தீவில் காலனித்துவ காலத்தில் பெருந் தோட்ட. பயிர்ச் செய்கைக்கு பெருந் தொகையான தொழிலாளர்கள் தேவைப்பட்டபோது சிங்களவர்கள் தொழிலுக்கு வர மறுத்தனால் ஆங்கிலேயர்களால் தென்னிந்தியாவிலிருந்து தமிழர்களை மலையகத்தில் குடியேட்டியதும் அரசியல் புவியியலே.

அதே நேரத்தில் மலையகத்தில் தமிழர்களுடைய தொகையை குறைக்க வேண்டும் என்பதற்காக இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் மலையகத் தமிழர்களின் குடியுரிமையை பறித்ததும் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் நான்கரை இலட்சம் தமிழ்மக்கள் வெளியேற்றப்பட்டதுவும் அரசியல் புவியியலே.

அவ்வாறே அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றத்தால் தமிழர் தாயகம் வெட்டி எடுக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டதும், அல்லை, கந்தளாய், மணலாறு என தமிழர் தாயகத்தின் தொடர்ச்சியை வெட்டி கூறுபோடும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட அரசியல் நோக்குக்காக செய்யப்பட்டவை என்ற அடிப்படையில் அரசியல் புவியியல் என்ற கோட்பாட்டுக்குள் அடங்கும்.

இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்படுகின்ற சிங்களக் கொடியேற்றம் நிலஅபகரிப்பு என்ற அரசியல் புவியியலால் தமிழர்களின் புவிசார் அரசியலை மேவி வெற்றிகொள்ள முடியும்.

இதனை சிங்கள தேசம் வலுவாக நம்புகிறது. அதனையே நடைமுறைப்படுத்துகின்றது. தமிழர்களை வெற்றி கொள்வதன் மூலம் இந்தியாவையும் வெற்றி கொள்ள முடியும்.

இந்த இரண்டு இலக்புகளையும் நோக்கியே இலங்கை அரசு தொடர்ந்து வெற்றிகரமாக நகர்ந்து செல்கிறது.

நிலமும்-மக்களும்-அரசும்
பொதுவாக உலகளாவிய அரசியலில் அரசு என்ற ஒன்று நிலை பெறுவதற்கு அதற்கு மக்கள், நிலம், அரசாங்கம். இறைமை ஆகிய நான்கு கூறுகளும் இன்றியமையாதவை.

இந்த நான்கில் ஏதேனும் ஒன்று இல்லையேல் அது அரசாக பரிணமிக்க முடியாது. ஈழத் தமிழர்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்தில் ஒரு அரைகுறை அரசை உருவாக்கியிருந்தனர்.

அந்த அரைகுறையரசு நிலத்தையும், அரசாங்கம் என்று சொல்லத்தக்க ஒரு நிர்வாக இயந்திரத்தையும், அந்த இயந்திரத்தின் ஊடாக மக்களை நிர்வகிக்க கூடிய அதாவது இறமையையும் நமது கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் கொண்டிருந்தனர்.

ஆனால் சர்வதேச அங்கீகாரம் என்ற ஒன்றை அது பெறவில்லை. ஆனால் இப்போது ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்ட. போது தமிழர்களால் சிறுகச் சிறுக உருவாக்கப்பட்ட நிர்வாக, அதிகார, சமூக கட்டமைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.

அத்தோடு பெருந் தொகை தமிழ் மக்கள் கொல்லப்பட்ட விட்டனர். யுத்தம் முடிவடைந்த நிலையில் பெருந் தொகை மக்கள் நாட்டை விட்டும் வெளியேறி விட்டனர்.

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் மக்களின் தொகை வெகுவாக குறைய தொடங்கிவிட்டது. யுத்த வெற்றியை பயன்படுத்தி தமிழர் தாயக நிலம் சிங்கள குடியேற்றங்களால் கபளீகரம் செய்யப்படுகிறது.

இன்றைய சர்வதேச சூழமைவில் தாயகத்தைவிட்டு வெளியேறும் ஈழத் தமிழர்கள் மீண்டும் தாயகத்துக்கு வருவதற்கான எந்த சந்தர்ப்பமும் கிடையாது.

யூதர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமது தாயக நிலப்பரப்பான இஸ்ரவேலை விட்டு வெளியேறி ஐரோப்ப கண்ட நாடுகளில் வாழ்ந்தார்கள்.

அந்த நாடுகளில் அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது அவர்கள் சென்று குடியேறிய நாடு ஒன்றில் அவர்களால் தங்களுக்கான ஒரு நாட்டை அமைக்க முடியவில்லை.

ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அவர்கள் தங்கள் தாயக நிலப்பரப்புக்கு திரும்பி குடியேறுவதற்கு அவர்களது ஆசீர்வதிக்கப்பட்ட பூமியில் அரபியர்களிடமிருந்தும்.

பாலஸ்தீனியர்களிடமிருந்தும் காணிகளை வாங்குவதற்கான குடியெறுவதற்கான குடியேற்ற நிலம் அங்கு இருந்தது. அதற்கான சூழலும் அன்றைய காலத்தில் அங்கு இருந்தது.

அதனால்தான் அவர்களால் இஸ்ரேலை உருவாக்க முடிந்தது. ஆனால் ஈழத் தமிழர்களால் தமது தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து விட்டால் மீண்டும் தாயகம் திரும்ப முடியாது. மேற்குலக வாழ்வியல் மாயைக்குள் தமிழர்களை சிக்க வைத்துவிட்டால் அதிலிருந்து மீளவும் முடியாது மட்டுமல்ல அந்த நாடுகளில் ஒரு பகுதியில் ஒரு அரசை தாபிக்கவும் முடியாது.

மேலும் மேற்குலகில் வாழ்ந்து கொண்டு அந்த நாடுகளின் அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய பெரிய ஈழத்தமிழ் மக்கள் தொகையும், அங்கு திரட்சி பெருவதற்கான வாய்ப்புக்களுமில்லை.

அக மிஞ்சிப்போனால் சில பாராளுமன்ற உறுப்பினர்களைத்தான் கொண்டிருக்க முடியும். விரல்விட்டு எண்ணக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களால் அந்த நாடுகளின் அரசியலில் ஒரு எல்லைக்கப்பால் செல்வாக்கு செலுத்த முடியாது.

அத்தோடு இலங்கை அரசை நெருக்கடிக்குள் சிக்க வைப்பதற்கான பலமும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை.

உதாரணமாக காலிஸ்தான் என்ற நாட்டை உருவாவதற்கு முயன்ற சீக்கியர்கள் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் பெருந் தொகையினராக வாழ்கின்றனர்.

கனடிய நாடாளுமன்றத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீக்கியர்களாக உள்ளனர். அதேநேரம் இந்திய நாடாளுமன்றத்தில்(லோக்சபா) 13 உறுப்பினர்கள் மட்டமே உள்ளனர் என்பது ஓப்புநோக்கத்தக்கது.

ஆனாலும் அவர்களால் இந்தியாவுக்கு எதிராக எதனையும் கனடா நாடாளுமன்றத்தில் செயல் பூர்வமாக செய்ய முடியாது.

வெறும் சலசலப்புகளுடன் அவை ஓய்ந்துவிடும். இது எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும். அதே நேரத்தில் தாயக நிலப்பரப்பு சிங்கள பேரினவாதத்தால் முழுமையாக கபளீகரம் செய்யப்பட்டுவிடும். தமிழர் இழந்த நிலத்தை மீண்டும் மீட்கவே முடியாது போகும்.

தமிழர்கள் சீக்கியர்களின் கனடிய அரசியல் பெறுமானநிலையினை உணர்ந்து அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இயல்பான சமூக தலைமைத்துவ இழப்பு
மேற்குலகில் வாழும் ஈழத் தமிழர்களால் அல்லது மேற்குலகில் குடியேறும் ஈழத் தமிழர்களால் எதிர்காலத்தில் தமது தாயக நிலப்பரப்பை மீட்கவோ, அல்லது அதற்கான காத்திரமான அரசியலை செய்வதற்கான அரசியல் சூழலை தருவதற்கு தாயக நிலப்பரப்பில் கணிசமான தொகுதி மக்கள் வாழவேண்டும்.

அவ்வாறு வாழுகின்ற மக்கள் வீரியமான, போராட்ட குணமுடைய, தேசபக்தி மிக்க, சமூக உணர்வு மிக்க, அறிவியல் வளர்ச்சி அடைந்த, செயல்திறன் மிக்க மக்களாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்பது தாயக நிலப்பரப்பில் இருக்கின்ற வீரியமிக்க, அறிவார்ந்த சமூகத்தை வெளியேற்றிவிடும். இவ்வாறு தமிழர் அரசியலுக்கும் சமூகவியலுக்கும் பங்களிப்பு செய்யக்கூடிய வளமான மக்கள் கூட்டமும், இளைஞர் படையும் வெளியேறிவிட்டால் தமிழ் சமூகம் தனது இயல்பான சமூக தலைமைத்துவத்தை இழந்துவிடும்.

தமிழ் மக்களிடம் அதன் பண்பாட்டியலில் இந்த இயல்பான சமூகத் தலைமைத்துவம் என்பது முக்கியமானது. முன்னுதாரணமான விளையாட்டு வீரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நன்மனம் கொண்டோர், சமூக அக்கறைமிக்கோர், சமூக அடிப்படை மனிதநேய செயற்பாட்டாளர் என அனைவரும் இந்த இயல்பான சமூக தலைமைத்துவம் என்ற தொகுதிகள் அடங்குகின்றனர்.

இவர்கள் அனைவரும் நெருக்கடியான சூழலிலிருந்து விடுபட்டு வெளியேறவே எண்ணுவர். இது தமிழினத்தை மேன்மேலும் ஆதலபாதாளத்துக்கு இட்டுச் செல்லும். இதன் அடுத்த கட்ட எதிர்க் கணிய வளர்ச்சியாக தமிழர் தாயகத்தில் அரசியல் நாணல் புற்களே தமிழர் அரசியலை முன்னெடுக்க நேரிடும்.

இது முற்று முழுதாக அடிபணிவு அரசியலையும் விலைபோகும் அரசியலையுமே மேற்கொள்ளும்.

தமிழர்களின் இலட்சிய மாற்றம்
1980 ஆம் ஆண்டு யாழ் நகரின் சுவர்களிலே “கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்” என ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழிழ அசெம்பிளியை உருவாக்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி அடைந்த தமிழ் தலைவர்கள் சிங்கள நாடாளுமன்றத்தில் போய் மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு இறங்கிப் போனார்கள்.

அப்போது இலங்கை அரசால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக ஒரு ஜப்பான் ஜீப் வண்டி வழங்கப்பட்டது. அதோடு தமிழ் தலைவர்கள் திருப்தி அடைந்துவிட்டார்கள்.

இதனைக் குறிக்கவே குறிப்பிட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டது அன்று. இப்போது ஒட்டப்பட வேண்டிய சுவரொட்டி “கேட்டது தமிழீழம் கிடைத்தது நிலையற்ற மேற்குலக சுவர்க்க வாழ்வு” என்றுதான் ஒட்டப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்பது தமிழ் தேசியத்தை வெகுவாகச் சிதைத்திருக்கிறது. தமிழ் தேசியம் சிதைவுண்டுபோனது மாத்திரமல்ல அது எதிர் கணிய வளர்ச்சியையும் அடைந்திருக்கிறது.

தமிழர்கள் தம்மை அறியாமலே தமிழ் தேசியத்துக்கு எதிரான திசையில் பயணிக்கிறார்கள் செயற்படுகிறார்கள். அது அரசியல் கட்சிகளாயினும் சரி, மக்களாயினும் சரி அனைவரும் தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் பாதையிலேயே பயணிக்கின்றனர்.

தமிழ் தேசியம் என்பது தமிழ் மக்கள் பொது விரும்பிக்காக ஓரணியில் நிற்பதும், ஓர் இலக்கத்திற்காக செயல்படுவதும் மாத்திரமல்ல மண்ணோடு ஒட்டிய வாழ்வையும் கொண்டதாக அமைய வேண்டும்.

இப்போது மண்ணைவிட்டு வெளியேறும் மனப்பாங்கு மக்கள் மனங்களில் திணிக்கப்பட்டு, விதைக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டுவிட்டது.

1980 களின் முன்னர் எந்த ஒரு சிறுவனிடமோ. இளைஞனிடடமோ எதிர்கால இலட்சியம் பற்றி கேட்டால் வைத்தியர், பொறியியலாளர், சட்டத்தரணி, கணக்காளர் ஆக வேண்டும் என்பதுதான் தனது இலட்சியம் என்பான்.

1980 களின் பின்னர் இலட்சியம் என்று கேட்டால் தமிழிழ அரசில்(தமிழிழ மண்ணில்) வாழ்வதுதான் இலட்சியம் என்பான். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களில் சிறுவர் தொடக்கம் முதியவர் வரை யாரிடமாவது இலட்சியம் என்னவென்று கேட்டால் கனடா, லண்டன், பிரான்ஸ் என மேற்குலகம் செல்வதுதான் இலட்சியம் என்கின்றனர்.

இப்போ தமிழிழம் என்ற இலட்சியம் தேய்ந்து வெளிநாடு செல்வதே இலட்சியமாகிவிட்டது.

கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாபெரும் தமிழ்த்தேசியச் சீரழிவு இது. இப்போது இது தமிழிழ விடுதலைப் போராட்டத்தின் தலைகீழ் போக்கை வெளிக்காட்டுகிறது.

வீழ்வதும் தோல்வியடைவதும் வாழ்வியலின் இயல்பு. ஆனாலும் வீழ்ச்சியிலிருந்தும் தோல்வியில் இருந்தும் மீண்டெழுவதற்கு முயற்சிக்காமல் பாடங்களை கற்றக்கொள்ளாமல் இருப்பதுதான் நிரந்தர தோல்வியையும் தரும்.

இப்போது ஈழத் தமிழர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழர்களே தோற்கடிக்கின்ற, தோற்கடித்துக் கொண்டிருக்கின்ற, தோற்கடிக்கும் பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே இந்தச் சீரழிவில் இருந்து ஈழத் தமிழர்களை பாதுகாக்காவிட்டால் “தமிழ் இனி மெல்லச் சாகும்” என்பது மெய்யாகிப்போகும்.

மக்களும் நிலமும் இழப்பு
இன்று வடமாகணத்தில் அண்ணளவாக பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் ஆறு இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக தமிழர் தாயகத்தின் இன்றைய தமிழ் மக்களின் தொகை 16 இலட்சம் மட்டுமே. அதே நேரத்தில் இலங்கையின் ஆயுதப் படைகளின் மொத்த எண்ணிக்கை 3, 46, 000 ஆகும்.

இத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் அதாவது 2,30, 000 ஆயுதப் படைகள் வடகிழக்கில் நிலை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் இருந்து பெருமளவு தமிழ் மக்கள் மேற்குலகை நோக்கி புலம்பெயர்கின்றபோது வடகிழக்கில் ஏற்படுகின்ற வெற்றிடங்களுக்கு இந்த பெருந் தொகை ஆயுதப்படையினரின் குடும்பங்கள்தான் தமிழர் தாயகத்தில் குடியமர்த்தப்படுவர்.

குடியேறுகின்ற போது மேலும் படித்த மேற்தட்டு வர்க்க தமிழ்மக்கள் வெளியேறி மேற்குலகு நோக்கி புலம்பெயர்வர். குறிப்பிட்ட அளவு கீழ்தட்டு வர்க்க மக்கள் தமிழகம் நோக்கி இடம்பெயர்வர்.

இவை இன்னொரு 20 ஆண்டுகளுக்குள் தமிழர் தாயகத்தில் தமிழர் முழுதாக அழிந்துவிடும் சூழல்கள் தோற்றுவிக்கப்பட்டுவிடும்.

1946 ஆம் ஆண்டுக் குடித்தொகையை அடிப்படையாகக் கொண்டு இயல்பான தமிழரின் குடித்தொகையை கணித்தால் இன்று 45 இலச்சத்திற்கு மேல் மக்குள் தொகை இருக்க வேண்டும்.

இப்படியே மலையக தமிழரின் மக்கள் தொகையும் இதற்கு நிரான தொகையாகும். ஆனால் இன்று வாழ்நிலையில் இலங்கைத் தீவு முழுவதிலும் ஈழத் தமிழர் 20 இலச்சத்திற்கு சற்று அதிகம்.

மலையகத் தமிழர் 9 இலச்சத்திற்கு அதிகம். இவ்வாறு தமிழரின் பாரியளவிலான சனத்தொகை வீழ்ச்சியை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும்.

மண்ணை இழந்தால் மக்கள் அனைத்தையும் இழந்துவிடுவார். மண்ணும் மக்களும் இன்றி அரசை ஸ்தாபிக்க முடியாது. எனவே தமிழர்கள் வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் தம்மை தற்காத்துக் கொள்கின்ற உயிரிதான் இந்த பூமிப்பந்தல் நிலைபெறும். அதனைத்தான் டார்வின் தனது கூப்புக் கொள்கையில் “தக்கன பிழைக்கும்” என்கிறார்.

அதாவது தம்மை தகவமைத்துக் கொள்ளாதவை அழிவடையும் என்பதே இயற்கை விதி. எனவே தமிழ் அரசியல் தலைமைகள் எனப்படுவோரும், ஈழத் தமிழ் அறிவியலாளர்களும், ஊடகவியலாளர்களும், கலைஞர்களும், மதத் தலைவர்களும், சமூகப் பிரதிநிதிகளும் இந்த நாசகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு குடியேற்ற தந்துரோபாயத்தை, இந்த நாசகார ரணிலின் திட்டத்தை சரிவர இனங்கான வேண்டும்.

இது ஒரு வகையில் இனச்சுத்திகரிப்பும், இனவழிப்பும்தான். இதனை புரிந்துகொண்டு உடனடியாக தமிழ் மக்களை தாயகத்தில் பாதுகாக்கவும் வலுவூட்டவும் தமிழ் தேசியத்தை அதன் ஆணிவேரிலிருந்து மீள்கட்டுமானம் செய்வதற்குமான செயல் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என வரலாறு கட்டளையிடுகிறது.

இப்போதைய இந்த வெளிநாட்டுக் குடியகல்வை ரணில் தனக்கான ஆதரவு நாடுகளூடாக திட்டமிட்டு முன்னெடுக்கிறார் என்பதே உண்மையாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.