;
Athirady Tamil News

மாணவர் போராட்டமும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும்

0

புலிகள் பாசிஸ்ட் என்றால் முதலில் பதிலளிக்க வேண்டியவர்கள் ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள்தான். தற்போது இவர்கள் ஜனநாய அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் புளொட் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் 2002 இல் வன்னிக்குச் சென்று புலிகளைச் சந்தித்திருந்தன. 2009 இன் பின்னரான தமிழ் இன ஒடுககுமுறை பற்றி வெளிப்படுத்தாமல் 2010 UTHR நிறுத்தப்பட்டது ஏன்? 2010 வரையும் UTHR யாருக்குச் சேவகம் செய்தது? யாருடை மனித உரிமை பாதுகாக்கப்பட்டது?

இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் என அழைக்கப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியடைந்து ராஜீவ் காந்தி பதவியிழந்த பின்னர் பிரதமராகப் பதவியேற்ற பி.வி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் 1989 செப்ரெம்பர் மாதம் இருபதாம் திகதியன்று இந்தியப் படைகளை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு உத்திரவிட்டிருந்தது.

அதற்கு அடுத்த நாள் இருபத்தோராம் திகதி மனித உரிமைச் செயற்பாட்டாளரும் யாழ் பல்கலைக்கழக உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ராஜினி திராணகம (Rajani Thiranagama) இனம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டார். ரஜினி திரணகம ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டுப் பின்னர் விலகியிருந்தார்.

மனித உரிமை மீறல்கள்
1980 களில் வடக்குக் கிழக்கில் செயற்பட்ட போராளிகள் மற்றும் சில தமிழ் ஆயுதக் குழுக்களின் மனித உரிமை மீறல்களை இவர் வெளிப்படுத்தியிமிருந்தார்.

யாழ் நகரில் உள்ள இவருடைய வீடு இந்திய இராணுவத்தினரால் சோதனையிடப்பட்டுப் பல ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கொழும்பில் இருந்து வெளிவந்த தினமுரசு பத்திரிகையில் அற்புதன் எழுதியிருந்தார்.

“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” என்ற தொடரில் 176,186 ஆம் பத்திகளில் அற்புதன் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். ராஜினி திராணகமவின் “முறிந்த பனை” (The Broken Palmyra) என்ற நூல் இந்திய இராணுவம், இலங்கை அரசபடைகள், புலிகள் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களின் கொலை,கொள்ளை, ஆட்கடத்தல், மற்றும் நீதிக்கு மாறான செயற்பாடுகள் பற்றி பகிரங்கமாக எடுத்துரைத்திருந்தது.

புலிகளை மாத்திரம் முறிந்த பனை என்ற நூல் விமர்சிக்கவில்லை.

இதனால் ராஜினி திராணகமவின் படுகொலைக்கு யார் காரணம் என்பதில் இதுவரை சந்தேகம் நிலவியபோதும் விடுதலைப் புலிகளே இக் கொலையைச் செய்தனர் என்று அவரது குடும்பம் உள்ளிட்ட பலரும் நம்புகின்றனர். இதுவரையும் கொலைக்கு எவரும் பொறுப்புக்கூறவில்லை.

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) சங்கம் (University Teachers for Human Rights (Jaffna) அல்லது (UTHR-J) 1988 இல் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற தேசிய அமைப்பின் ஒரு பகுதியாகச் செயற்படுவதே இச் சங்கத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.

ராஜினி திராணகமவின் மரணத்தின் பின்னர் இந்த அமைப்பு பேராசிரியர் ராஜன் கூல் மற்றும் கோபாலரட்ணம் சிறிதரன் ஆகியோரால் தொடர்ந்தும் இயக்கப்பட்டது. ஆனால் எங்கிருந்து செயற்படுகிறார்கள் என்று தெரியாமலேயே இச் சங்கத்தின் அறிக்கைகள் அன்று வெளி வந்து கொண்டிருந்தன.

பேராசிரியர்களான ராஜன்கூல், தயா சோமசுந்தரம் மற்றும் கோ. சிறிதரன் ஆகியோர் இணைந்து ரஜினி திராணகமவின் “முறிந்த பனை” என்ற நூலை எழுதியிருந்தனர்.

ராஜினியின் மறைவுக்குப் பின்னர் தயா சோமசுந்தரம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தும் மருத்துவப் பேராசிரியராகக் கடமையாற்றியிருந்தார். 2013 இல் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலும் பங்குபற்றியிருந்தார். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் சிகிச்சைகளை தயா சோமசுந்திரம் வழங்கியிருந்தார்.

ஆனால் ராஜன்கூல், சிறிதரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்து அப்போதே இடம்பெயர்ந்துவிட்டனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் 2010 இல் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இயங்கியதாகத் தெரியவில்லை. தேடலுக்கான இணைத்தளங்களிலும் அது பற்றிய விபரங்கள் இல்லை.

தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடுதலை
“சிறுபான்மையினரின் எதிர்காலத்திற்கான சில அடிப்படைக் கேள்விகள் மற்றும் ஜனநாயகத்தை அழித்தல்” (Some Fundamental Questions for the future of Minorities and the Erasure of Democracy) என்ற தலைப்பில் இச் சங்கம் தனது uthr.org என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் யூன் பதினொராம் தினதி 2010 அன்று அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டிருந்தது.

மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற பெயரில் அன்று இயங்கிய கோ. சிறிதரன், ராஜன் ஹூலுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் இணைந்தபோது மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை வழி நடத்துவதில் முன்னின்றவர்.

இருவரின் செயற்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடுதலை பற்றிய தவறான பார்வைக்கு இட்டுச் சென்றது என்ற விமர்சனங்களே அன்று அதிகமாக எழுந்தன. ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் ஐக்கிய இலங்கைக்குள் நிறைவேற்றப்படலாம் என்ற கருத்தையும் இருவரும் முதன்மைப்படுத்தினர்.

மே மாதம் தொடர்பிலான அறிக்கை
இச் சங்கம் இருபத்து ஏழாம் திகதி மே மாதம் 1998 ஆம் ஆண்டு மனித உரிமை மீறல்கள் பற்றி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் நடந்த கொலைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் பற்றிய அந்த அறிக்கையில் புலிகள் மீதுதான் அதிகளவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது போன்று தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களால் நல்ல வரவேற்பைப் பெற்றன.

2001 இல் அப்போதைய அதிபர் சந்திரிகா, இந்த ஆசிரியர் சங்கம் பற்றிய சாதகமான அதாவது இலங்கைத்தீவின் மனித உரிமைப் பாதுகாவலர்கள் என்ற ஒப்புதல் ஒன்றை வழங்கியிருந்தார்.

இப் பின்னணியில் யூன் இருபத்து ஏழாம் திகதி 2006 அன்று archive.pov.org என்ற ஆங்கில இணையத் தளத்தில் ராஜன் கூல் மற்றும் சிறிதரன் ஆகியோர் வழங்கிய நேர்காணலில் விடுதலைப் புலிகள் 2002 சமாதானப் பேச்சின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியிருந்தனர்.

தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மாற்றுக் கருத்தாளர்களை புலிகள் அனுமதிக்கவில்லை என்றும் சமாதானப் பணியில் ஈடுபட்ட நேர்வே கூட புலிகளைக் கண்டிக்கவில்லை எனவும் இருவரும் கூட்டாகக் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இப் பின்புலத்திலேயே 2007 ஆம் ஆண்டு ராஜன் ஹூல் மற்றும் சிறிதரன், ஆகியோர் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான மார்ட்டின் என்னல்ஸ் (Martin Ennals) விருதைப் பெற்றனர் என்று தெளிவாகிறது.

(1993 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரித்தானிய விருது மனித உரிமைப் பாதுகாப்புக்கான நோபல் பரிசு என்றும் அழைக்கப்படுகின்றது)

ஆசிரியர் சங்கம் தொடர்பிலான கருத்துக்கள்
அதேநேரம் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலையை நியாயப்படுத்தி எழுதி வரும் நெதர்லாந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சுவீடன் உப்சலா பல்கலைக்கழக (Sweden Upsala university) பேராசிரியர் பீற்றர் ஷாக் (Peter Schalk) மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முற்று முழுதாக புலிகளுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை ஒற்றை ஆட்சி அரசை நியாயப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

ராஜனி திராணகமவின் “முறிந்த பனை மரம்” என்ற நூல் பற்றிக் கருத்துரை எழுதிய அவுஸ்திரேலியாவில் வாழும் சிங்கள மூத்த சட்டத்தரணியான பிரையன் செனவிரட்ன (Brian Senewiratne) இந்தச் சங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே மாறிவிட்டதாக கவலை வெளியிட்டிருந்தார்.

பேராசிரியர் ராஜன்கூல், சிறிதரன் ஆகியோர் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசியர் சங்கம் என்ற பெயரில் வெளியிடும் அறிக்கைகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிராகவும் பயன்படுத்தி வருவதாகவும் இவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் படுகொலைகளை குறிப்பாக இராணுவத்தின் மனித உரிமை மீறல் செயற்பாடுகளை இச் சங்கம் பாராட்டுவதாக அமைந்துள்ளது எனவும் பிரையன் செனவிரட்ன குற்றம் சுமத்தியிருந்தார்.

வெறுமனே விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள் என்று குற்றம் சுமத்துவதாகவும் எந்த கோட்பாட்டு அடிப்படையும் இல்லாத “உணர்வுவாத குணாதிசயங்கள்” (Sensationalist Characterization) என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது பற்றிய விரிவான விளக்கம் பிரயன் செனவிரட்ன பற்றிய இணையத்தில் உள்ளது.

எனவே பிரயன் செனவிரட்ன பேராசிரியர் பீற்றர் ஷரக் ஆகியோரின் வாதத்தின் படி புலிகளை பாசிச அமைப்பு என்று கூறுவது அறிவார்ந்த விமர்சனம் அல்ல என்று தெரிகிறது.

குறிப்பாக, ஒருபுறம் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடும் இலங்கை இராணுவத்தையும் அதன் உயர் அதிகாரிகளையும் பாராட்டிக் கொண்டு மறுபுறும் அரசியல் விடுதலைக்காகப் போராடும் புலிகளை பாசிசவாதிகள் என்று கூறுவதும் அறிவார்ந்த விமர்சனம் அல்ல.

துரோக அரசியல்
இந்த நிலையில் கோட்பாட்டு ரீதியான கருத்தியல்களை ஆராயாமல் எடுத்த எடுப்பில் இளம் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் புலிகளை பாசிஸ்ட் என்று பொதுவெளியில் கூறுவதற்குப் பின்னால் “துரோக அரசியல்” (Treacherous politics) மீண்டும் துளிர் விடுவது போல் தென்படுகிறது.

யாழ் பல்கலைக்கத்தில் இவரை உரையாற்ற அனுமதித்துப் பின்னர் கருத்துரையில் உரிய நியாங்களை மாணவர்கள் சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால் அது தடுக்கப்பட்டதால் இப்போது அரசியல் விவகாரமாகியுள்ளது.

ஆனாலும் புலிகள் பாசிஸ்ட் என்றால் முதலில் பதிலளிக்க வேண்டியவர்கள் ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள்தான். தற்போது இவர்கள் ஜனநாய அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் புளொட் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் 2002 இல் வன்னிக்குச் சென்று புலிகளைச் சந்தித்திருந்தன.

ஆகவே புலிகள் பாசிஸ்ட்டா? இல்லையா? என்று அவர்கள்தான் முதலில் பொறுப்புக் கூற வேண்டும். ஏனெனில் 1986 இல் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளுக்குப் பின்னர் முதற் தடவையாக இந்த இயக்கங்கள் விடுதலைப் புலிகளோடு முரண்பாட்டில் உடன்பாடாக 2002 பெப்ரவரியில் இருந்து ஒன்றிணைந்து செயற்பட்டு வந்தன.

2009 இற்கு பின்னரான சூழலிலும் தமிழ்த்தேசியம் வேறு புலிகள் வேறு என்று பிரிக்க முடியாத அளவுக்கு தமிழ்த்தேசியக் கொள்கை மக்களிடம் வியாபித்திருக்கிறது.

ஆகவே தமிழ்த் தேசிய அரசியலில் புலிகள் பிரிக்க முடியாத “ஆழப் பதிந்த குறியீடு” (Deep Symbolism in Tamil Politics) இதனைத் தவிர்த்து விட்டுத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அரசியல் செய்ய முடியாத பின்னணியும் உருவாகியிருக்கிறது.

ஆகவே ஜனநாயக சோசலிசம் என்று கூறிக் கொள்ளும் ஒரு அரசின் இன அடக்கு முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராளிகளைக் கண்டிப்பதற்காக பாசிஸ்ட் என்று அரசுகள் கூறுவதாக பேராசிரியர் கெவின் பாஸ்மோர் (Kevin Pasmore) வாதிடுவதாக இப் பத்தியில் கடந்தவாரம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

1988 இல் உருவாக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன ஒடுக்கல் செயற்பாடுகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் 2010 இல் தன்னுடைய பணியை நிறுத்திக் கொண்டதன் மூலம் விடுதலைப் புலிகளை மாத்திரம் மலினப்படுத்தும் நோக்கிலும் அதற்காகத் தமிழர்களின் மனித உரிமை விவகாரத்தைக் கைலெடுத்து அறிக்கைகள் வெளியிட்டிக்கின்றன என்பதும் இங்கே பட்டவர்த்தனமாகிறது.

ஆகவே கெவின் பாஸ்மோர் கருத்தின் உட்கிடக்கையாக ஒரு இனத்தின் அரசியல் விடுதலையை ஒடுக்குமுறை செய்யும் அரசுகளிடம் மனித உரிமைச் செயற்பாடுகள் என்ற போர்வையில் அடகுவைக்கும் சங்கங்களையும் பாசிஸ்ட்டுகள் என்று வரையறை செய்யலாமா என்ற கேள்வி எழுகின்றது.

தேவையற்ற இராணுவ விசாரணை
புலிகள் பாசிஸ்ட்டுகள் என்று கடந்த பதினான்கு வருடங்களின் பின்னர் மீளவும் புதுப்பித்துக்கொண்டு வரும் ஆங்கிலம் தெரிந்த சில தமிழ் மாற்றுக் கருத்தாளர்கள் 2010 இல் நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நீட்சியாக வேறொரு தளத்தில் வருகிறார்களா அல்லது வேறு ஏதேனும் அரசியல் பின்புலம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.

சுவஸ்திகாவின் உரை தடுக்கப்பட்டதால் யாழ் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் கண்டித்து வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக மாணவர்கள் வியாழக்கிழமை நடத்திய போராட்டம் சுமுகமாக முடிவுற்றுள்ளது.

அறிக்கை வாபஸ் பெறப்பட்டுப் “புலிகள் பாசிஸ்ட்” என சுவஸ்திகா கூறிய கருத்தை ஏற்க முடியாதெனவும் சங்கம் மீள வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே தனிப்பட்ட நபர்களின் கருத்துச் சுதந்திரத்தில் மாத்திரம் கவனம் எடுக்காமல் பல்கலைக்கழகத்திற்குள் இடம்பெறும் வேறு சில மறுப்பு அல்லது தேவையற்ற இராணுவ விசாரணை விவகாரங்களிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கவனம் எடுத்திருந்தால் இந்த அறிக்கை வாபஸ்பெறும் நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதைச் சங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக முன்னாள் அசிரியர் சங்கத்தின் செயற்பாடுகளைப் போன்று இயங்கக் கூடாது என்பதற்கு அறிக்கை வாபஸ் பெறப்பட்டமை நல்ல படிப்பனை. அதேநேரம் மாணவர்களும் உணர்வு ரீதியாக மாத்திரமல்லாது அறிவுபூர்வமாகவும் செயற்பட வேண்டும் என்பதற்கும் இது நல்ல எடுத்துக்காட்டு

You might also like

Leave A Reply

Your email address will not be published.