;
Athirady Tamil News

புவிசார் அரசியலும் பூகோள நலங்களும் ஈழத்தமிழருக்கான பார்வையும்

0

இன்று நாம் காணும் உலகு மேற்கு ஐரோப்பியர்களினால் வடிவமைப்புச் செய்யப்பட்ட , கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குக்கு இசைவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று இருக்கின்ற அரசியல் பொருளியல் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அனைத்தினுடைய மூலகர்த்தாக்களாகவும் மேற்கு ஐரோப்பியர்களே உள்ளார்கள். மேற்கு ஐரோப்பியர்களுடைய நாடுகாண் பயணங்களே இந்த உலகை வடிவமைப்பதில் பெரும் பங்களிப்பு செய்தது.

இஸ்லாமிய ஓட்டமான் பேரரசு மேற்குக் கிழக்குக்கான தரைவழிப் பாதையை 1453 ஆம் ஆண்டு கைப்பற்றி மேற்கு கிழக்குக்கான தொடர்பை துண்டித்ததன் விளைவினால் ஏற்பட்டதாகும். ஆகவே இந்த உலக ஒழுங்கினை, அதன் செல்போக்கினை மாற்றி அமைக்கும் உந்து சக்தியாக நல்லதோ கெட்டதோ தூண்டிகளாக எப்போதும் இஸ்லாமிய உலகம் இருந்துள்ளது.

அறிவியல் பரப்புரை
அத்தகைய மாற்றங்கள் உலகளாவிய நாடுகளினதும் தேசிய இனங்களினதும் இருப்பை மாற்றி அமைத்துள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் நிலத்தை மையப்படுத்திய அரசியலில் இருந்துதான் அதாவது புவிசார் அரசியலில் இருந்துதான் தோற்றம் பெற்றிருக்கின்றன. புவிசார் அரசியல், அரசியல் புவியியல், பூகோள அரசியல், என்ற சொற்பதங்களை வெறும் புவியியல் சொற்பதங்களாக தமிழர் தரப்பினால் பார்க்கப்படுகிறது.

இவை பற்றி அறிவியல் ரீதியாக நாம் அதிகம் வளர வேண்டியுள்ளது. குறிப்பாக இந்த விடயம் சார்ந்து அரசியல்வாதிகளும், அறிஞர்களும், கல்விசார் சமூகமும் பெரிதும் கவனம் செலுத்தாமல் இருப்பதும் கவலைக்குரியது. இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் இவை பற்றிய விஞ்ஞானபூர்வமான, திட்டவட்டமான ஒரு அறிவியல் பரப்புரையை மேற்கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

புவிசார் அரசியல்
அரசு என்பது எப்போதும் மண்ணைச் சார்ந்ததாகவே இருக்கும். காட்டிலும், புல்வெளிகளிலும் வேட்டையாடுவதிலும், மந்தை மேய்ப்பதிலும் நாடோடியாக இடம்விட்டு இடம் நகர்ந்து வாழ்ந்த மனித இனம் எப்போது தரையில் விவசாயத்தை மேற்கொண்டு நிரந்தர குடியிருப்பை அமைத்தாதோ அப்போதே நிலம் மனிதனின் உடமையாக்கப்பட்டுவிட்டது. தரையில் பயிரை நட்டு பயிர் நிலத்தில் வேர்விட்டபோது மனிதனும் நிலத்தில் வேர்விட்டு விழுதெறிந்து நிலத்தோடு கட்டிப் பிணைக்கப்பட்டுவிட்டான்.

மனிதன் நிலத்தில் வேர்விட்டபோது அரசு என்ற நிறுவனமும் தோன்றிய கலாச்சாரம் ஆரம்பமாகிவிட்டது. நிலத்தில் மனிதனும் அரசும் வேர்விட்டதிலிருந்து புவிசார் அரசியல் என்ற அரங்கத்துக்குள் மனிதகுல வரலாறு நுழைகிறது. அதுவே புவிசார் அரசியலின் தோற்றுவாயுமாகும்.

ஆனாலும் புவிசார் அரசியல் என்ற அணுகுமுறை 19ஆம் நூற்றாண்டின் பின்னரே அதிகம் விருத்தியடைய தொடங்குகிறது. புவிசார் அரசியல், மானுட புயல், அரசியல் புவியியல், பூகோள அரசியல் என்ற இந்த நான்கு விடயங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகவும், ஒன்றை ஒன்று கட்டுப்படுத்துவதாகவும், ஒன்றை ஒன்று மேவி மேலாண்மை செலுத்தி செயற்படுபவயாகவும் அமைந்து காணப்படுகிறன.

பூமிப் பந்தில் 71 விதமான பரப்பு நீர் பரப்பாக காணப்படுகிறது. மிகுதி 29 வீத நிலப்பரப்பில் 15 விதமான நிலப்பரப்பில் மாத்திரமே மனிதன் வாழ முடியும். அவ்வாறு மனிதன் வாழக்கூடிய பகுதியை மானுட புவியியல் என வரையறை செய்யப்படுகிறது. இந்த மானிட புவியியல் பகுதிக்குள்தான் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்ற குடியிருப்புகள் ,கட்டடங்கள், நகர நிர்மாணங்கள் என அனைத்தும் அடங்குகின்றன.

பாதுகாப்பதற்கான போராட்டம்
இவ்வாறு மனிதன் வாழக்கூடிய பகுதியில் மனித குழுக்கள் அல்லது மனித இனம் தமக்கான அரசை தோற்றுவித்து குறிப்பிட்ட நிலப்பரப்பை எல்லைகளாக வகுத்து ஆளுமை செலுத்துகின்ற போது தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியையும் அதன் எல்லைகளைப் பாதுகாப்பதையும் நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து விதமான மனிதர் நடத்தைகளும் புவிசார்ந்தே மேற்கொள்ளப்படுகிறன.

புவிசார் அரசியல் இந்தப் பூமிப் பந்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தமது வாழ்வுக்காக இயற்கையுடன் இடையறாது போராடுகின்றன. மனிதனும் ஒரு ஜீவராஜி என்ற அடிப்படையில் அவன் இயற்கையுடன் மாத்திரம் அல்ல மனித சமூகத்திற்கு இடையேயும் ஓயாது போராட வேண்டியுள்ளது. எனினும் இடத்திற்கான போராட்டமே அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

தனது இருப்பிடத்தை இழந்து எந்த ஜீவராதியும் நிலைபெற முடியாது. அந்த அடிப்படையில் பிராணிகளும்சரி மனிதனும்சரி தன்னுடைய இடத்தினை பாதுகாப்பதற்கான போராட்டமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சிங்கங்கள் தாம்வாழும் பிரதேசத்துக்குள் மாற்று சிங்கக் கூட்டங்கள் நுழைவதை அனுமதிக்காது. காகங்களும் அப்படித்தான். சிறிய குருவிகளும் தங்கள் கூட்டை நோக்கி புழு பூச்சி பிராணிகள் வருவதையும் அனுமதிக்காது. புழுக்கள்கூட தம்முடைய கூட்டை பாதுகாப்பதற்காகவே போராடும்.

ஆக ஒவ்வொன்றும் தான் வாழும் சூழலை பாதுகாப்பதற்கு உயிர்கள் அனைத்தும் போராடுகின்றன. தான்வாழும் சூழலின் எல்லைகளை வகுத்து அவை தமக்கான ஒரு பாதுகாப்பு வளையத்தை வடிவமைத்துக் கொள்கின்றன. இத்தகைய உயிரிகளின் பாதுகாப்பு வளையம்தான் இன்று உலகளாவிய அரசியலில் புவிசார் அரசியல் என அழைக்கப்படுகிறது.

அரசியல் ஆபத்து
இற்றைக்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிரந்தர குடியிருப்புகளை அமைத்து பயிர்களையும் கால்நடைகளையும் வளர்த்து உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கினானோ அப்போதே நிலம் சார்ந்து அரசு என்ற நிறுவனத்தையும் உற்பத்தி செய்துவிட்டான். இவ்வாறு புவிசார் அரசியலை அரசியலின் அடிப்படையை வியாக்கியானப்படுத்துவதோ விளங்கிக் கொள்வதோ இலகுவான தன்று. எனினும் இதனை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. காலத்துக்கு காலம் புவிசார் அரசியலின் வளர்ச்சி என்பது விசாலமாக தொடர்ந்து வளர்ந்து செல்கிறது.

அரசியல் புவியியல் இன்றைய உலகில் காணப்படுகின்ற அரசுகள் குறிப்பாக வல்லமை வாய்ந்த அரசுகள் தம்முடைய அரசினுடைய அரசியல் எல்லைக் குள்ளும் அரசியல் எல்லைக்கு வெளியே இருந்து தமது அரசியல் எல்லைக்குள் வரக்கூடிய ஆபத்துக்கள் அச்சுறுத்தல்களை தடுப்பதற்காக தன் அரசியலுக்கு வெளியே ஒரு பாதுகாப்பு வளையம் ஒன்றை கற்பனையாக உருவாக்கி அந்தப் பிராந்தியத்தை தமது செல்வாக்கு மண்டலத்துக்குள் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் பாதுகாப்பதற்கும் எடுக்கின்ற இயற்கையாக இருக்கின்ற அல்லது மனிதனால் சாதாரண சூழலை மாற்றி தமக்கு ஏற்ற வகையில் அந்தப் பகுதிகளை மாற்றி அமைத்து செயற்படுகின்ற செயல்கள் அனைத்தும் அரசியல் புவியியல் என்ற பரப்புக்குள் அடங்கும்.

குறிப்பாக புதிய குடியேற்றங்களை உருவாக்குதல், புதிய தரைவழி பாதைகளை திறத்தல், கால்வாய்களை வெட்டி கடல்கள், சமுத்திரங்கள், ஏரிகளை இணைத்தால் என்பதை என்பனவெல்லாம் அரசியல் புவியலுக்குள் அடங்கும். இவை புவிசார் அரசியலை வெற்றிகொள்வதற்கான நோக்கை கொண்டதாகவும் அமையலாம். பூகோள அரசியல் இந்தப் பூமிப்பந்தில் மனித இனம் வாழக்கூடிய நிலப் பகுதியையும், முடியாத நீர்ப்பகுதியையும் , அண்ட வெளியையும் தமது மேலாண்மைக்கு கீழ் கொண்டுவந்து அல்லது செல்வாக்கு மண்டலத்துக்குட்படுத்தி தமது அரசுக்கு, அதன் கட்டமைப்புக்கு தேவையான அனைத்து வளங்களையும் தமது நாட்டுக்கு சுரண்டிச் செல்லுதல் அல்லது நாட்டின் உடமையாக்குதல் என்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றன.

அனைத்து வகையான மனித மேலாண்மை நடவடிக்கைகளும் பூகோள அரசியல் என வரையறை செய்யப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் பூகோள அரசியல் என்பது இந்த பூமி பந்தில் அனைத்து பாகங்களிலும் இருக்கின்ற வளங்களை சுரண்டி தனது நாட்டின் தேசிய நலனுக்கு பயன்படுத்துவதக அமையும். அதுவே அமெர்க்க தேசிய அபிலாசையுமாகும்.

ரோய் யுத்தம்
பனிப்போரின் முன்னர் ரஷ்யாவும் இதே நிலையிலே இருந்தது. ஆனால் இன்று அது தன்னுடைய எல்லைக்குட்பட்ட புவிசார் அல்லது பிராந்திய அரசியலுக்குள் அதிகம் முடக்கப்பட்டுவிட்டது. இத்தகைய உலகம் தழுவிய அதாவது பூகோளம் தழுவிய தேசிய அபிலாசை சீனாவுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்தியா அந்த நிலையை எய்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

மேற்காசியா — வட ஆபிரிக்க பகுதிதான் இந்த உலகத்திற்கு மனித நாகரீகத்தை பரப்பிய மனித படர்ச்சியை வெளிக் கண்டங்களுக்கு உந்தித்தள்ளிய ஆரம்ப புள்ளியாகும். அங்குதான் முதலாவது நிரந்தர மனித நாகரீக குடியிருப்புகள் தோற்றம் பெற்றன. அரசுகள் தோற்றம் பெற்றன. கிமு 5ம் நூற்றாண்டில் ஐரோப்பா நோக்கிய முதலாவது பெரும் படையெடுப்பு அக்காட் பேரரசால் மேற்கொள்ளப்பட்டது. அதுவே முதலாவது புவிசார் அரசியல் யுத்தமாக கணிக்கப்படுகிறது. அதற்கு அடுத்ததாக கிமு 1000ஆம் ஆண்டை ஒட்டிய ரோய் யுத்தம் ஒரு புவிசார் அரசியல் யுத்தமாகவே அரசரவியல் வரலாற்றில் கணிக்கப்படுகிறது.

அது மேற்கிக்கும் கிழக்குக்குமான புவிசார் அரசியலாக பார்க்கப்படுகிறது. 196ஆண்டுகள் தொடர்ந்து நடந்த சிலுவை யுத்தமும் , ஜெருசலம் என்ற நிலத்தை மையப்படுத்தியே நிகழ்ந்தது. அது ஒரு மதத் தலத்தை பாதுகாப்பதற்கும், தம்பசப்படுத்துவதற்காகவும் நடத்தப்பட்ட யுத்தமே சிலுவை யுத்தம் என்று சொல்லப்பட்டாலும் அது அந்த நிலத்தை மையப்படுத்தியே நிகழ்ந்தமையினால் அது ஒரு புவிசார அரசியல் யுத்தமாகவே சொல்லப்பட வேண்டும் .

ஐரோப்பியர்களுக்கு சவால்
இவ்வாறு பிற்காலங்களில் மனித குல வளர்ச்சிக்கும் அதன் இயங்கு போக்கிற்கும், மாற்றத்திற்கும் மத்தியகிழக்கு சரியோ, தவறோ, நல்லதோ, கெட்டதோ எதுவாயினும் இந்த பிராந்தியத்தின் தூண்டுதலினாற்தான் இந்த உலகம் மேற்கு ஐரோப்பியர்களினால் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. எது எப்படியோ இந்தப் பிராந்தியமே எப்போதும் ஐரோப்பியர்களுக்கு சவாலாக அமைந்து காணப்படுகிறது.

இன்று புவிசார் அரசியலும், அரசியல் புயலும், பூகோள அரசியலும் முட்டி மோதும் களம் இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி தோன்றியிருக்கிறது. இந்தக் களத்தில் இந்து சமுத்திரமும் பூமிப் பந்தின் மத்தியாக கருதப்படுகின்ற மத்திய கிழக்கு என்று அழைக்கப்படுகின்ற மேற்காசியாவும் வட ஆப்பிரிக்காவையும் உள்ளடக்கிய அராபிய – இஸ்லாமியப் பகுதியே இதன் பிரதான களமாகவும் மையமாகவும் உள்ளது. இப்பகுதி அட்லாண்டிக் – பசிபிக் சமுத்திரங்களை இணைக்கும் பகுதியான இந்துசமுத்திரமும், ஆப்பிரிக்க- ஐரோப்பிய. ஆசிய ஆகிய மூன்று கண்டங்களையும் இணைக்கின்ற அதே நேரத்தில் உலகின் மையப் பகுதியாகவும் காணப்படுகிறது.

உலகின் பிரதான இரண்டு மதங்களான கிறிஸ்தவமும் இஸ்லாமும் தோன்றிய நிலமாகவும் இந்த மத்திய கிழக்கு விளங்குகிறது. இங்கு தோன்றிய கிறிஸ்தவம் ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய இஸ்லாத்தால் துரத்தி அடிக்கப்பட்டு அது மேற்குலகிலும் பின்னர் வஸ்கொடகாமா யுகத்தின் ஆரம்பத்துடன் உலகம் தழுவிய 240 கோடி (2.5 பில்லியன்) கிறிஸ்தவர்களைக் கொண்ட முதலாவது மதமாகவும் உலக சனத் தொகையில் 31.4% தொகையைக் கொண்டதாகவும், உலகின் 126 நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் பெருவளர்ச்சி அடைந்திருக்கிறது.

மத்திய கிழக்கில் கிபி 6ம் நூற்றாண்டில் தோன்றிய இஸ்லாமிய மதம் அந்தப் பிராந்தியத்தில் ஒரு பெரும் புவிசார் அரசியல் யுத்தத்தை மேற்கொண்டு கிறிஸ்தவத்தை துடைத்தெறிந்து மத்திய கிழக்கில் இஸ்லாம் மதத்தை கொண்ட 24 அரபு நாடுகளையும் ஒரு பாரசீக நாட்டையும் உள்ளடக்கிய பிராந்தியமாகும். இன்று உலகில்190 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். ஆனாலும் இஸ்லாம் மதம் தோன்றிய பிராந்தியத்தில் சுமாராக 55 கோடி இஸ்லாமியர்களே வாழ்கிறார்கள். ஆனால் இந்தப் பிராந்தியத்துக்கு வெளியே135 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.

புவிசார் அரசியல் நலன்கள்
உலகில் 49 நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். 43 நாடுகளில் இஸ்லாமிய சட்டமே நடைமுறையில் உள்ளது. உலக சனத் தொகையில் 24.9% இஸ்லாமியர்களாக உள்ளனர் என்பதும் கவனத்துக்குரியது . அந்தவகையில் பிராந்தியத்திற்கு என்று தனியான புவிசார் அரசியல் நலன்களும், குணாம்சங்களும் உண்டு. அத்தோடு இப் பிராந்தியத்தியம் புவிசார் அரசியலிலும் அதே நேரத்தில் உலகம் தளவிய பூகோள அரசியலின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவும் செல்வாக்கினை நிர்ணயிக்கும் கேந்திர ஸ்தானமாகவும் அமைந்துள்ளது.

மூன்று கண்டங்களையும் மூன்று சமுத்திரங்களையும் இணைக்கும் மத்திய தளமாக அமைவதனால் இந்த பிராந்தியம் பூகோள அரசியலில் இன்று முதன்மை பாத்திரத்தை வகிக்கிறது. மத்திய கிழக்கு பகுதியின் புவிசார் அரசியல் மாற்றங்கள் உலகளவிய பூகோள அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. 1453 ல் ஓட்டோமான் துருக்கியர்கள் கொன்ஸ்தாந்தி நோபிளை கைப்பேற்றியதனால் மேற்குக் கிழக்குக்கான வர்த்தக பாதை தடைப்பட்ட போது தான் ஐரோப்பியர் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டு வாஸ்கோடகாமாவினால் இந்து சமுத்திரத்திற்கான கடல்வழிப் பாதையும் அதன் மூலம் மேற்கு ஐரோப்பியர்களுடைய உலகம் தழுவிய கடல் சார் அரசியலும் விஸ்தரிப்பதற்கு காரணமாகியது.

ஐரோப்பியர்களின் கடல்சார் அரசியல் பல்வேறுபட்ட பிராந்தியங்களின் பல புதிய நாடுகளை தோற்றம் பெறச் செய்தன. பல நாடுகளை ஒருங்கிணைத்து பலம்வாய்ந்த ஒரு நாடாகவும் ஆக்க முடிந்தது. அதற்கு உதாரணம் இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியா என்கின்ற ஒரு புதிய தேசம் உருவாக்கப்பட்டமை இவ்வாறு பிரித்தானியர்களால் இந்துக்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தியா என்பது கிழக்காசியாவில் பௌத்தத்தை மையமாகக் கொண்ட சீன அரசுக்கு அதனுடைய அல்லது அதனுடைய வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.

இவ்வாறு பல்வேறுபட்ட மேற்குலக அரசியல் சிந்தனைகளுக்கு ஊடாக ஆசிய, ஆபிரிக்க, அமெரிக்க கண்டங்களில் நாடுகள் தோற்றம் பெற்றன. அந்நாடுகளின் புவிசார் அரசியலை நிர்ணயம் செய்ய உதவின. எனவே கடல் சார் அரசியல் என்பது புவிசார் அரசியலையும் புவிசார் அரசியலின் ஊடான பூகோள அரசியலையும் வலுப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஏதுவாக கோட்பாட்டு வடிவம் பெறலாயிற்று.

மொன்றோ கோட்பாடு
அந்த வகையில் ஐக்கிய அமெரிக்காவினால் 02/12/1823ல் மொன்றோ கோட்பாடு(Monroe doctrine) பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவே உலகளாவிய ரீதியில் முதலாவதான புவிசார் அரசியல் கோட்பாடாக ஒரு அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட கோட்பாடாகவும் அமைகிறது.இந்தக் கோட்பாடானது அமெரிக்கா கண்டங்கள் இரண்டும் அமெரிக்க நாட்டு பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள பகுதி என்றும் அதனைச் சுற்றியுள்ள பசிபிக் அத்லாண்டிக் சமுத்திரப் பகுதிகள் அமெரிக்க பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்டது என்றும் இந்தப் பிராந்தியத்துக்குள் வெளி வல்லரசுகளோ, வெளி அரசுகளோ, ராணுவ ரீதியில் உள்நுழைவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்பதாக அமைகிறது. இந்த பிரகடனம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே புவிசார் அரசியல் என்பது இன்றைய உலகின் தவிர்க்க முடியாத, எதிர்க்க முடியாத ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக அரசியல் நியதியாக உள்ளது.

கடந்த 500 ஆண்டுகளாக நிலவிய வாஸ்கோடகாம யுகம் இந்த உலகத்தை நிர்ணயிப்பதிலும் வடிவமைப்பதிலும் செல்வாக்கு செலுத்தியமையை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். வாஸ்கோடகாமா கண்டுபிடித்த புதிய கடல் பாதைகள் மத்திய கிழக்கை முற்றுகையிட்டு கடந்த 500 ஆண்டுகளாக சிறை பிடித்துள்ளது என்று சொல்லுவதே சாலப்பொருந்தும். 19 நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளம் இங்கு பெருமளவில் இருப்பதனால் இன்றைய உலகிற்கான சக்தி வளங்களை வழங்கும் பிராந்தியமாகவும் இது திகழ்கிறது. இருந்த போதிலும் மத்திய கிழக்கினால் ஐரோப்பியர்களுக்கு சவாலாக எழுந்து நிற்க முடியவில்லை .

பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தம்
எழுந்து நிற்க ஐரோப்பியர்கள் அனுமதிக்கவும் இல்லை. தொடர்ந்தும் இப்பிராந்தியத்தை தமது கட்டுக்குள் வைத்திருக்கவே மேற்குலகம் விரும்புகின்றது. மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் பல்வகைப்பட்ட தன்மை வாய்ந்ததாக ஐரோப்பியர்களால் வடிவமைக்கப்பட்டு அரசியல் புவியியலால் கட்டுண்டு கிடக்கிறார்கள். அந்த கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பிலிருந்து அவர்களால் வெளிவரவும் முடியவில்லை.

பெரும் போக்கிற்கு இஸ்லாமிய உலகம் என்று சொல்லிக் கொண்டாலும் அந்தப் பிராந்தியத்தில் பொதுவான பரந்த இஸ்லாமிய தேசியவாதம் என்பது கிடையாது. அது நாட்டு தேசியவாதமாகவே அதாவது ஈரானியன் என்றும், இராக்கி என்றும் பலஸ்தீனியர் என்றும், லிபியன் என்றும், மோரோகன் என்றுமே அவர்கள் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள்.

உலகின் மேற்கிக்கும் கிழக்கிக்கும் நாகரீகத்தை தூண்டிய, நாகரீகத்தை கடத்திய, நாகரீகத்தை உலகிற்கு கடத்திய பாதையில் அமைந்திருக்கின்ற மத்திய கிழக்கு இன்னும் நிலப் பிரபுத்துவத்தின் கீழும், யுத்தப்பிரபுக்களின் கீழும், இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் கீழும் அகப்பட்டிருப்பதனால் பெரும் பொருளாதார வளம் இருந்தும் நிமிர முடியாமல் தத்தளிக்கிறது. இப்போதும் கூட பாலஸ்தின் இஸ்ரேல் யுத்தத்திலும் வெறும் 65 லட்சம் யூதர்களை 55கோடி இஸ்லாமியர்கள் சூழ்ந்து இருந்தும் வெற்றிகொள்ள முடியாமல் இருப்பது இந்த பிராந்தியத்தின் புவிசார் அரசியலிலும், பூகோள அரசியலிலும் ஐரோப்பியர்களின் வலுவான பிடி எவ்வாறு உள்ளது என்பதற்கு நல்ல உதாரணம். ஆனாலும் இப்போது கிழக்காசியாவிலிருந்து சீனா புறப்பட்டு மத்திய கிழக்கை ஐரோப்பியரிடம் இருந்து பறித்தெடுப்பதற்கான படலம் இந்து சமுத்திரத்தில் ஆரம்பமாகிவிட்டது.

இந்த கிழக்காசியச் சீனரின் இத்தகைய நடவடிக்கையில் இந்திய உபகண்டம் சீனாவினால் முற்றுகையிட்டு சிறை வைக்கப்படும் அபாயம் ஒன்றும் தோன்றுகிறது. அந்த இந்திய உபகண்ட.தின் ஒரு பக்கச் சிறைக் கதவு இலங்கைத் தீவாக உள்ளது. மத்திய கிழக்கின் இந்தப் பூகோள அரசியல் மையத் தானம் காரணமாக பூகோள அரசியலில் போட்டியிடுகின்ற அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கும் கிழக்காசிய நாடான சீனாவுக்கும் இடையிலான போட்டியில் சீனாவின் இந்தோ பசிபிக் கடல் பாதையில் இலங்கைத் தீவு இருப்பதனால் இலங்கைத் தீவும் இந்த புவிசார் அரசியல் வளையத்துக்குள்ளும் அதே நேரம் பூகோள அரசியல் வளையத்துக்குள்ளும் அகப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்கள் தமக்கான சரியான அரசியல் முடிவுகளை எடுக்கவும் தரைசார், கடல்சார் அரசியல் வியூகங்களை கவனித்து தமக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டிது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. இந்த கிழக்காசிய ஆழிப் பேரலையில் தமிழீழ மக்கள் மூழ்கிப் போகாமல் வரமுன் காப்பது அவசியமானது. எனவே அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய, இந்தியா உபகண்ட, ஆப்பிரிக்கா புவிசார் அரசியலையும் கண்ட புவிசார் அரசியலையும் அடுத்த தொடரில் பார்ப்போம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.