450ஐ நெருங்கும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை!
யா ழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நீதிமன்ற உத்தரவிற்கமைய தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களும் சான்றுகளும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற 56 நாள் அகழ்வுத் திட்டத்தில், 36 மற்றும் 37ஆம் நாள் நிலவரப்படி மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450ஐ நெருங்கி வருகிறது.
அகழ்வுப் பணியின் 37ஆவது நாளில் (ஜூலை 19) மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்புப் பணிகளின் போது, கால்கள் மடிக்கப்பட்டு உட்கார்ந்த நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னதாக 36ஆவது நாளில் வித்தியாசமான முறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மண்டையோட்டைச் சுற்றி சுத்தம் செய்தபோதே, அது உட்கார்ந்த நிலையிலிருந்த முழு எலும்புக்கூடு என்பது தெரியவந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 04ஆம் திகதியும் இதேபோன்று கால்கள் மடிக்கப்பட்டு உட்கார்ந்த நிலையில் ஒரு எலும்புக்கூடு மீட்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு கண்டெடுக்கப்படும் இரண்டாவது எலும்புக்கூடு இதுவாகும்.
இது சாதாரண முறையில் அடக்கம் செய்யப்பட்டாமல், சித்திரவதைகள் அல்லது கொடூரமான முறையில் புதைக்கப்பட்டதற்கான சான்றாக இருக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சிலநாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மேலும் பல மனதை உலுக்கும் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெரியவரின் எலும்புக்கூட்டுடன் இணைந்து ஒரு சிறியவரின் (குழந்தையின்) எலும்புக்கூடு ஒட்டிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தாயும் சேயுமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.37ஆம் நாள் அகழ்வில் சிசுக்களின் எலும்புக் கூடுகள் உட்பட 06 மனித எலும்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு வழங்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் மனித எச்சங்களைத் தவிர, அவர்கள் பயன்படுத்திய மற்றும் அணிந்திருந்த பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன:
வெள்ளை நிறப் பாசிமணிகள், இரும்புத் தகடு துண்டுகள், வளையல்கள் மற்றும் வடிகல் போன்றவை சான்றுப் பொருட்களாக நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் உள்ளடங்கலாக இதுவரை 91 நாட்கள் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில்,
446 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.434 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். நீதிவான் எஸ். லெனலின் குமார் முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனின் மேற்பார்வையில் இந்த அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் இதுகுறித்த தகவல்களை ஊடகங்களுக்குத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறார்.
வழக்கமான மயானங்களில் புதைக்கப்படும் முறைகளுக்கு மாறாக, கூட்டங்கூட்டமாகவும், ஒன்றோடொன்று பிணைந்த நிலையிலும் கண்டெடுக்கப்படும் இந்த எச்சங்கள் அறிவியல் ரீதியான பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதன் முடிவுகள் வெளியான பிறகே, இத்தகைய கொடூர மனித உரிமை மீறல்களுக்கும் அவலங்களுக்கும் காரணமான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, பாதிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பாரப்பாகும்.
அ.கனகசூரியர்