இலங்கையின் கல்வி முறையும் சமகால சவால்களும்
சுதேச காலத்தில் கல்வி வழங்கலில் சில ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்ட போதிலும், சமூகத்திற்குப் பொருத்தமான ஒரு கல்விமுறை நிலவியது. பின்னர் வந்த காலனித்துவ ஆட்சியில் போத்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோர் தமது மதத்தைப் பரப்புவதற்கும், வியாபார நோக்கங்களுக்கும், ஆட்சியைத் தக்கவைப்பதற்கும் ஏற்றவாறு கல்வியைப் பயன்படுத்தினர். இதனால் தமக்குச் சாதகமானவர்களுக்கும் ஆங்கிலக் கல்வி மற்றும் உயர்கல்வியை வழங்கி, பெரும்பான்மையான மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியைக் கூட மறுக்கும் சமூக ஏற்றத்தாழ்வு உருவாக்கப்பட்டது. இருப்பினும், ஒல்லாந்தர் காலத்தில் கட்டாயக் கல்வி, ஸ்கொலாக்கல் ஆணைக்குழு, தாய்மொழிக் கல்வி போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
காலனித்துவ முறையின் ஏற்றத்தாழ்வுகளைக் களைய, நாட்டின் முதலாவது கல்வியமைச்சர் Dr. டொக்டர். சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவின் தலைமையில் 1943 ஆம் ஆண்டு விசேட கல்வி ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் விளைவாக 1945 ஒக்டோபர் 01 முதல் இலங்கையில் இலவசக் கல்வியும், தாய்மொழி வழிக் கல்வியும் நடைமுறைக்கு வந்தன.
இன்றைய நிலையில் இலங்கையின் எழுத்தறிவு வீதம் 93.3% ஆகவும், மனித அபிவிருத்திச் சுட்டெண் 0.776 (193 நாடுகளில் 89வது இடம்) ஆகவும் உயர்ந்துள்ள போதிலும், சமகாலக் கல்வி முறைமை பல்வேறு கட்டமைப்புச் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.பொதுக் கல்வியில்
காணப்படும் சவால்கள் பாட அடைவுச் சரிவு
2025 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் மாணவர்களின் செயலாற்றுகை வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக 29.89% மாணவர்கள் கணித பாடத்தில் சித்தியடையத் தவறினர்.
பிரதேச ரீதியான சமமின்மை
க.பொ.த (உ/த) பாடசாலைகளில் 51.42% பாடசாலைகளிலேயே விஞ்ஞானப் பிரிவு காணப்படுகின்றது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்விக்கான வாய்ப்புகள் பெருமளவு மறுக்கப்படுகின்றன.
ஆசிரியர் பகிர்வுச் சிக்கல்:
தேசிய மட்டத்தில் போதுமான கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் பங்கீடு சமமாக இல்லை. தேசிய பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்களும், மாகாண பாடசாலைகளில் கடுமையான பற்றாக்குறையும் நிலவுகின்றது.உயர்கல்வி மற்றும்
சந்தைத் தேவைகள் வரையறுக்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதி:
மூலவளப் பற்றாக்குறையால் உயர்கல்வி வாய்ப்புகள் சுருங்கியுள்ளன. 2025 க.பொ.த (உ/த) பரீட்சையில் 176,527 (62.64%) மாணவர்கள் பல்கலைக்கழகத் தகைமை பெற்றிருந்தும், 42,937 மாணவர்களுக்கே அரசு அனுமதி வழங்கத் திட்டமிட்டுள்ளது.
சந்தைத் தேவைக்கும் கல்விக்குமான இடைவெளி:
உலகளாவிய பொருளாதாரப் போட்டிக்கு STEM (விஞ்ஞானம், தொழினுட்பவியல், பொறியியல், கணிதம்) துறைகளின் வளர்ச்சி அவசியமாகும். ஆனால், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பட்டதாரிகள் கலை மற்றும் மானுடவியல் துறைகளிலேயே அதிகமாக உருவாவதால், தொழில் சந்தையில் STEM துறைக்கான தகுதிவாய்ந்த ஊழியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
குறைந்த ஆராய்ச்சிப் பங்களிப்பு: பல்கலைக்கழகங்கள் புதிய அறிவை உருவாக்கி உற்பத்தியை உயர்த்த வேண்டும். ஆனால் அரச மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கற்பித்தலுக்கு முன்னுரிமை அளித்து, பிரயோக ரீதியான ஆராய்ச்சிகளில் குறைவாகவே ஈடுபடுகின்றன.
சீர்திருத்தங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள்
காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தப்படும் கல்விச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கான தெளிவான அறிவின்மை, போதிய பயிற்சியின்மை, வளப் பற்றாக்குறை, எதிர்மறையான மனப்பாங்குகள் மற்றும் முறையான மேற்பார்வையின்மை ஆகியவை இத்திட்டங்களின் தோல்விக்குக் காரணமாகின்றன. மேலும், பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தயார்நிலையில் இருந்தாலும், உரிய நிறுவனங்கள் வழிகாட்டல்களை ஒழுங்காக வழங்குவதில்லை.
எனவே, ஆசிரியர் பகிர்வைச் சீரமைத்தல், STEM கல்வியை விரிவாக்குதல், பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமே இலங்கையின் கல்விச் சவால்களுக்குத் தீர்வுகாண முடியும்.