விசா வழங்க மறுத்த அமெரிக்கா! ஐநா அவையில் விடியோ மூலம் பாலஸ்தீன அதிபர் உரை!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் விடியோ பதிவின் மூலம் உரையாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. பொது அவையின் 81 ஆவது கூட்டத்தொடரில், ஏராளமான நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தொடரில், காஸா மற்றும் பாலஸ்தீன விவகாரம் குறித்து பல்வேறு நாடுகளின் அதிபர்கள் தங்களின் உரையில் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் அவரது குழுவினருக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட விடியோ மூலம் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நேற்று (செப். 24) ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றியுள்ளார்.
ஐ.நா. அவையில் விடியோ மூலம் ஒளிப்பரப்பான பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் உரையில்,
“பாலஸ்தீன மக்கள் வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான காலகட்டங்களில் ஒன்றை இப்போது எதிர்கொண்டு வருகின்றனர். மேற்கு கரையில் தொடரும் இஸ்ரேலிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் காஸாவில் நடைபெறும் போரால், பாலஸ்தீன மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் இஸ்ரேல் குறிவைத்து தகர்த்துள்ளது.
இன்னும் எவ்வளவு காலம்தான் இஸ்ரேலுக்கு எதிராக சில நாடுகள் அமைதியைக் கடைபிடிப்பார்கள் அல்லது எங்கள் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை விநியோகம் செய்வார்கள்?
காஸாவிலும் மேற்கு கரையிலும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்புகளை உலகம் கண்டுள்ளது. பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் இன்னும் எதற்காகக் காத்திருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரண்டு நாடு தீர்வுகளை மேற்கொள்ள சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், நியூயார்க் ஐ.நா. பொது அவையில் இன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.