;
Athirady Tamil News

நெடுந்தீவு கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள்

0
நவீன ஜனநாயகத்தில், நிறைவேற்றதிகாரம் அல்லது நீதித்துறையினால் நீதி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் தலையீட்டை, எதிர்த்துக் கேள்வி கேட்பது மிகவும் முக்கியமானது.

ஆனால் தற்போது இலங்கையின் சட்ட அமைப்பில் நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்தங்களுக்கான அவசர தேவை உள்ளது என்பதையும் யாரும் மறுக்கமாட்டார்கள். சட்டக் கலாசாரம், வழக்கறிஞர்களின் நடத்தை, சட்ட நடைமுறைகள், முரண்பாட்டு தீர்வு முறைகள், சட்ட தீர்ப்புகளில் ஏற்பட்டுள்ள முடிவில்லாத தாமதங்கள் மற்றும் ஒத்திவைப்புகள் ஆகியவற்றில் மாற்றம் தேவை. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்ற போது இருந்த சட்ட அமைப்பின் நிலையை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றபோது நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்தது. நாட்டின் பொருளாதாரம் மாத்திரமல்ல சகல அரச துறைகளிலும் ஊழலும் இலஞ்சமும் மலிந்திருந்தது. சீர்குலைந்த ஒரு நீதித்துறையையே அரசு பொறுப்பேற்றது. பல வருடகால புறக்கணிப்பு, போதிய ஊதியமின்மை, ஊழியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் பல வருடங்களாக இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில் நீதிபதிகளாகப் பணியாற்றும் மூத்த சட்ட வல்லுநர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தும் வகையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை 65 லிருந்து 67 ஆண்டாகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை 63 லிருந்து 65 ஆண்டாகவும் நீடிப்பதன் மூலமும், கீழ் நீதிமன்றங்களில் அதற்கேற்ப வயதை அதிகரிப்பதன் மூலமும், அவ்வாறு விசாரணைகள் இன்றித் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க உடனடி, நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பது எந்தவொரு விவேகமுள்ள அரசாங்கத்தினதும் கடமையாகும்.

சிரேஷ்ட வழக்கறிஞர்கள் இறக்கும் வரை சட்டப் பணியைத் தொடர்வதும், உயர் சட்ட ஆய்வுகளை மேற்கொள்வதும், சட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதும், இலங்கையில் அரசியல் தலைவர்களாகக் கூட உருவெடுப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும் போது, நீதிபதிகளுக்கு மட்டும் ஏன் இந்தத் தடை என்பது நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதை ஆதரிப்போரின் வாதமாக இருப்பினும் அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.

இங்கிலாந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கட்டாய ஓய்வுபெறும் வயது 75 ஆகும். அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கட்டாய ஓய்வுபெறும் வயது எதுவுமில்லை. ஏனைய தெற்காசிய நாடுகளிலும் 65 வயது வரம்பு என்பது சாதாரணமான ஒன்றாகும்.

இலங்கையின் நீதவான் நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம் வரை ஒட்டுமொத்தமாக 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் இன்றுவரை விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ள சூழ்நிலையில், அதற்கு இங்கு நிலவும் தீவிர நீதிபதிகள் பற்றாக்குறையே காரணமாகச் சொல்லப்படுகின்றது. அவ்வாறாயின்

நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் நீதிபதிகளின் சட்டபூர்வ ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் கூட்டுவதில் உள்ள பிரச்சினைதான் என்ன?

அதனை எதிர்க்கும் தரப்பினர் முன்வைக்கும் வாதம் அவ்வாறு பதவிக்காலத்தை அதிகரிப்பதால் பதவிக்காலம் நீடிக்கப்பட்ட நிதிபதிகள் அரசுக்கு சாதகமாகவே செயற்படுவார்கள். நீதித்துறையின் சுயாதீனம் இழக்கப்பட்டுவிடும் என்பதுதான். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சட்டத்தரணிகள் சங்கம் கடந்த வாரம் விசேட பொதுச்சபை கூட்டத்தை நடத்தி விசேட யோசனையை நிறைவேற்றி, அரசாங்கத்திடம் பல திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளமையயும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசின் முன்மொழிவின் கீழ், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 வயது வரை அதிகரிக்கும். அதேபோலமேல்முறையீட்டு நீதிமன்ற  நீதிபதிகளின் வயதெல்லை 63 இலிருந்து 65 வயதாக அதிகரிக்கும்.

மேன் நீதிமன்ற நீதிபதிகளின் வயதெல்லை 61 இலிருந்து 63 வயது வரை அதிகரிக்கும்.

அதேபோல மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதிகளின் வயது 60 லிருந்து 62 வயது வரை அதிகரிக்கும்.

இலங்கை நீதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படி, 2025 ஜூன் 30 நிலவரப்படி இலங்கையிலுள்ள 293 நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1,134,474 வழக்குகளில் நீதவான் நீதிமன்றங்களில் 818,869 வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்களில் 260,007 வழக்குகள், மேல் நீதிமன்றம் (குற்றவியல்) 27,376 வழக்குகள், சிவில் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றம் 6,591 வழக்குகள், வர்த்தக மேல் நீதிமன்றம் 6,330 வழக்குகள், உயர் நீதிமன்றம் 5,396 வழக்குகள், மேன்முறையீட்டு நீதிமன் வழங்குகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படுகின்றது.

நீதித்துறையின் சுயாதீனம் இழக்கப்படுகின்றது, சகலருக்கும் நீதிக்கான அணுகல் மறுக்கப்படுகின்றது, நிறைவேற்றதிகாரம் நீதித்துறையை ஆட்கொள்கின்றது என்றெல்லாம் விமர்சனங்கைள முன்வைப்பது, நாட்டில் முறைமை மாற்றமொன்றை எதிர்பார்த்து வாக்களித்து, மக்கள் வழங்கிய ஆணையை கேலிக்குட்படுத்துவதற்கொப்பானது என்கிறது அரசு.

வழக்கறிஞர்களின் ஒத்திவைப்புக் கலாசாரம் மற்றும் நீதிக் கட்டமைப்பில் ஏற்படும் முடிவில்லா தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் மக்கள் வழங்கிய அந்த ஆணையில் அடங்கும்.

நியாயமற்ற ஒத்திவைப்புகளும் தாமதங்களும் சட்டத்தைச் சீர்குலைத்து, நீதியை மறுத்து, நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்துகின்றது. அளவுக்கதிகமாக நிரம்பி வழியும் சிறைச்சாலைகள், விசாரணையின்றி பல வருடங்களாகக் காவலில் இருப்போர் மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் குறித்து, தற்போது பரந்தளவில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஓய்வுபெறும் வயது நீடிக்கப்பட்டு, பொது நலனில் அக்கறை கொண்டு சேவை செய்ய விரும்பும் மனசாட்சியுள்ள நீதிபதிகளைத் தக்கவைத்துக்கொள்வது தவறான முடிவாக அமையுமா?

நீதியைப் பயமின்றிப் பாதுகாப்பதில் வழக்கறிஞர்களுக்குப் பங்கு உண்டு. அவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உரிமையுடையவர்கள், ஆனால் உண்மையும் நீதியுமே முக்கியம். ஊகங்கள், போலி வாதங்கள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படக் கூடாது.

பேச்சுச் சுதந்திரம், போராட்டம், ஜனநாயக உரிமைகள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொறுப்பேற்கச் செய்தல் ஆகியவற்றில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும்.

மூத்த நீதிபதிகளைத் தக்கவைத்துக்கொள்வது நீதித்துறையின் பிற நிலைகளில் உள்ளவர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் என்ற ஒரு வாதமும் இதனை எதிர்ப்பவர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றது. பதவி உயர்வுப் பாதையைச் சீரமைப்பது முக்கியமா அல்லது நீதித்துறைத் தீர்ப்புகளைத் துரிதப்படுத்தும் முதிர்ச்சியுடன் கூடிய ஆழ்ந்த ஞானம் முக்கியமா என்பது தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

சீர்திருத்தம் என்பது ஒரு அமைப்பு இயங்கும் முறையை மேம்படுத்துவதற்காகச் செய்யப்படும் மாற்றமாகும். இலங்கையில் நீதித்துறையில் நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளதுடன், முழு அமைப்பும் பல வருடங்களாக நிதி ஒதுக்கீடின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல துறைகளில் பற்றாக்குறை ஏற்பட்டு, நீதிமன்றங்கள் அதிகரித்து வரும் வழக்குத் தேக்கத்தை எதிர்கொள்கின்றன.

புதிய நீதிபதிகள் மற்றும் நீதவான்களை நியமிப்பது அவசியமானது, ஆனால் நியமனம் மட்டுமே சிக்கலைத் தீர்க்காது. புதிய நியமனம் பெற்றவர்களுக்கு அவர்களின் பணிகளில் திறமையாகவும் திறம்படவும் செயல்பட முறையான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை தேவை. இங்குதான் அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் அறிவும் நடைமுறை அனுபவமும் புதிய நீதிபதிகள் நீதியாகவும் திறம்படவும் வழக்குகளைக் கையாளத் தேவையான திறன்களையும் நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள உதவுகின்றன.

இந்த ஒரு காரணத்திற்காகவே, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஒரு முக்கியமான சீர்திருத்தமாகக் கருதப்படலாம். இது அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் நீண்ட காலம் சேவையில் இருக்கவும், தலைமைத்துவம், வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியை வழங்கவும், அதே வேளையில் வழக்குத் தேக்கத்தைக் குறைக்கவும் அனுமதிக்கிறது. அதே நேரத்தில், நீதித்துறை புதிய நீதிபதிகளை ஆட்சேர்ப்பு செய்து பயிற்சி அளிப்பதைத் தொடர வேண்டும், அப்போதுதான் நீதித்துறை நீண்ட காலத்தில் வலுவானதாகவும் பயனுள்ளதாகவும் மாறும்.

இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு இவ்வாறு அச்சுறுத்தலாக அமையும்? நீதிக்கான அணுகலை இது எவ்வாறு பாதிக்கும்?

நலிவடைந்த, ஒதுக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான நீதியை ஆதரிக்கும் வழக்கறிஞர்களே நாட்டுக்கும் தேவை. சிவில் உரிமைகள், சமூக நீதி மற்றும் சுற்றாடல் பாதுகாப்புக்காகப் பிரசாரம் செய்யும் வழக்கறிஞர்கள் தேவை.

பிரசாரங்கள், கல்வி, கிளர்ச்சி மற்றும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் மூலமே ஜனநாயக சீர்திருத்தங்கள் சாதிக்கப்பட்டன. பாராளுமன்றம், நீதித்துறை அல்லது நடுவர் மன்றங்கள் (Juries) என நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளும் எந்தவொரு நவீன ஜனநாயக அமைப்பையும் சிந்தித்துப் பாருங்கள், அது எவ்வாறு சாதிக்கப்பட்டது என்பது புரியும்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, வாக்குரிமை, பேச்சுரிமை, சித்திரவதையிலிருந்து விடுதலை, தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என நாம் இயல்பாகக் கருதும் எந்தவொரு விடயத்தையும் யோசித்துப் பாருங்கள்; இவை எதுவுமே ஆளும் வர்க்கத்தால் தட்டில் வைத்துக் கொடுக்கப்படவில்லை என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள்.

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான இலங்கையின் நிலைமை நாம் விவாதிப்பதற்கான ஒரு சாதாரண விஷயம் அல்ல. ஊழலை ஒழித்து மாற்றத்தைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களின் இறையாண்மையே இங்கு முக்கியமானது. நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதி செய்வதில் மக்கள் எதிர்பார்த்தபடி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. கடந்த காலத்தில் சுயாதீனமான தீர்ப்புகளை வழங்க முடியாத நீதிபதிகள் இப்போது பயமோ தயக்கமோ இன்றி வழக்குகளைத் தீர்க்கிறார்கள். சிலருக்கு அரசின் திட்டம் பிடிக்காமல் இருக்கலாம்,

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகச் சித்தரிப்பது தவறானது என்ற எண்ணத்தில் உள்ளோர் பலர். ஆனால் அவர்களது குரல் பொது வெளியில் ஒலிப்பதில்லை என்பதே இங்குள்ள பிரச்சினை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.