;
Athirady Tamil News

கனடாவில் யூத எதிர்ப்பு மேலோங்குவதாகக் கூறி அமெரிக்காவில் தஞ்சம் கோர ஊக்குவிப்பு!

0

கனடாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால் அச்சுறுத்தலை உணரும் கனடிய யூதர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்காவின் பழமைவாத சிந்தனைக் குழு மற்றும் முன்னாள் ஒன்ராறியோவாசி ஒருவர் வலியுறுத்தியுள்ளனர்.

கனடாவிலுள்ள யூதப் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான கனடிய யூதர்கள் தொடர் அச்சத்தில் வாழ்வதாகவும், அதிலிருந்து தப்பிக்க முயல்வதாகவும் ‘ஜூயிஷ் டூல்சா’ அமைப்பின் நிர்வாக இயக்குநரான ஜோ ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜோ ராபர்ட்ஸ், 2016 இல் ஒன்ராறியோவுக்குச் சென்று குடியேறினார்.

எனினும், 2023 ஒக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது முதல் உள்ளூர் பகுதிகளில் யூத எதிர்ப்புச் சுவரோவியங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்ததாகக் கூறி, அவர் தனது குடும்பத்துடன் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள ‘டூல்சா’ நகருக்கு இடம்பெயர்ந்தார்.

டூல்சா நகரில் யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தின்கீழ், கனடாவைச் சேர்ந்த சுமார் 800 முதல் 900 யூதக் குடும்பங்கள் கனடாவை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துத் தங்களைத் தொடர்புகொண்டுள்ளதாக ராபர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிலும் யூத எதிர்ப்பு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது என்பதை டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க யூதக் குழுவின் 2025 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சமீபத்திய வரலாற்றில் அமெரிக்க யூதர்களுக்கு எதிராக அதிக வன்முறைகள் பதிவான ஆண்டாக 2025 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 30 வயதிற்குட்பட்ட யூதர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தனிப்பட்ட முறையில் யூத எதிர்ப்புக் வெறுப்புப் பேச்சுகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் என்ற சிந்தனைக் குழுவும், தங்கள் மதம் அல்லது இனத்தின் காரணமாகக் கனடாவில் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ள கனடிய யூதர்களுக்கு அமெரிக்கா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.