;
Athirady Tamil News

“புளொட்” செயலதிபர் உமாமகேஸ்வரன் குறித்த, வரலாற்றில் ஒரு பகுதி… (படங்கள்)

0

புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் குறித்த வரலாற்றில் ஒரு பகுதி… (படங்கள்)

“மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி” தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர்.உமா மகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் “ஜனன தினத்தை” (18.02.1945) முன்னிட்டு.. 1993 ம் ஆண்டு, SWISS “விடுதலைப்பாதை” ஊடாக வெளிவந்த தகவல்… (மீள்பிரசுரம்)

மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி
“ மக்கள் யுத்தத்தின் மகத்தானதளபதி “ செயலதிபர் தோழர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் (முகுந்தன்) (18.02.1945 -16.07.1989)

இத்தீவில் அடக்குமுறைகளினாலும், ஒடுக்குமுறைகளினாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு நான்கு தசாப்தங்களிற்கு மேலாக, ஓர் தேசிய இனத்திற்குரிய தனித்துவ உரிமைகள் யாவும் திட்டமிட்டு பறிக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசிய இனம் தனது தலைவிதியை தானே தீர்மானிக்க வேண்டும் என்ற இறுதியான, உறுதியான நிலைப்பாட்டை கையிலேடுத்த போது, அந்த மக்களிற்கு, அந்த மக்களின் உணர்ச்சிகரமான போராட்டத்திற்கு, புரட்சிகர அமைப்பு வடிவம் கொடுத்த, இந்த மாபெரும் மனிதர் ஓர் மகத்தான தளபதியே!!

பேச்சுக்களிலும், அகிம்சைப் போக்குகளிலும், எதையுமே சாதிக்க முடியாது ஏமாற்றப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வந்த எமது இனம் இழந்து நின்ற உரிமைகளை ஆரம்பத்தில் இரந்து கேட்டுப் போராடிய பரந்து பட்ட மக்களின் சக்தியில் அவர் ஓர் பங்காளர்.

.உரிமைகள் மறுக்கப்பட்டு, உடைமைகள் குறையாடப்பட்டு உயிர்களை கையில் பிடித்து வாழும் நிலைக்கு எமது இனம் தள்ளப்பட்டு, எம்மைப் பாதுகாக்க ஒரே வழி ஆயுதங்களை நாமும் தாங்குவதே என்று, தூங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பிய இளைஞர் படையில் இணையற்ற வீரர்.

அதிகார மோகத்தில் தமிழ் அன்னையின் விடுதலையை மறந்து, ஆட்சியாளர்களுடன் கூடிக் குலாவி, சலுகைகள் பெற்று சமரசம் செய்ய சந்தர்ப்பம் தேடிய சுயநலத் தலைவர்களின் போலித்தனங்களையும், சந்தர்ப்ப் வாதங்களையும் தோலுரித்துக் காட்டி, ஆங்காங்கே, சிருபோரிகளாக புறப்பட்ட துப்பாக்கி வேட்டுகளிற்கு, அரசியல் நோக்கை சொல்லித் தந்த அருமை ஆசான்.

மலையகத் தமிழின் தனது தாயக மண்ணில் துரத்தியடிக்கப்பட்டு மரணத்தின் வாசலில் விடப்பட்டு ஏதிலிகளாக்கப்பட்ட போது, அவர்கள் எமது தாயக மண்ணில் அகதிகளே அல்ல என்று அன்போடு அழைத்து ஆற அமர அடிப்படைத் தேவைகளை அள்ளி வழங்கிய மனிதாபிமானி.

ஆழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது இனம், பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அடிப்படையில் எமது மண் பாதுகாக்கப்பட வேண்டும், அதுவும் எல்லைப்புறங்களே என உறுதியாக நம்பி, தனது போராட்ட நடவடிக்கைகளை எமது பிரதேசத்தின் எல்லைப் புறங்களிற்கு நகர்த்திய தீர்க்கமான போர் முறையாளன்.

எமது தமிழ்த் தேசிய இனம் தனது முழுமையான விடுதலையை பெற்றிட வேண்டுமாயின் இத்தீவின் சகல சிறுபான்மை இனங்களினாலும் பரஸ் பரம் சக,தேசிய இனங்களின் உரிமைகல் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கை, தனது வாழ்நாள் பூராவும் நடைமுறைப் படுத்திய சிறுபான்மை இனங்களின் சிறந்த நண்பர்.

எமது போராட்டம் இனவாத சேற்றுக்குள் புதைக்கப்படுவதன் மூலம் சிங்கள தேசிய இனத்தை புரையோடிப்போன வர்க்க முரண்பாடுகள் மறைக்கப்படுவதை, அல்லது அதன் மூலம் சாதாரண சிங்கள மக்களிடையே ஆளும் வர்க்கம் தமிழின விரோத உணர்வை வளர்க்காமல் தடுப்பதன் மூலமே எமது போராட்டத்தை இலகுவாக்கலாம் என்று இறுதிவரை நம்பிய இனப் பற்றுள்ள உண்மையான தோழன்.

இத்தீவின் சாதாரண சிங்கள மக்களிடையே எமது உரிமைகளிற்கான நியாயமான கோரிக்கைகள் குறித்த அக்கறையையும், அழுத்தமான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தவும், அதன் மூலம் எமது இனத்தின் அபிலாஷைகளை சிங்கள ஆளும் வர்க்கம் நிராகரிக்க முடியாதவைகளாக்கிடவும் வான் அலைகளில் எமது எண்ணங்களையும் எதிர்பார்ப்புக்களையும் செலுத்தி, புதிய உணர்வுகளை அந்த மக்களிடையே ஏற்படுத்தியவர்.

முதன் முதலாக மக்கள் யுத்தம் ஒன்றிற்கான முழு தயாரிப்புகளை முடுக்கி விட்டதுடன், எமது தாயகப் பிரதேசத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு மரம், செடி, கொடிகளையும் கூட போராட்டத்தில் இணைத்ததுடன், ஒவ்வொரு தந்தையும், தாயும், தனயனும், தங்கையும் தம் இனத்தை தம் போராட்டத்தை, தம் கடமையை உணரச் செய்தவர்

சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிடும் பணியின் ஆரம்பம் – மொரீசியஸ் பிரதமர் திரு. ஜகன்நாத் அவர்களுடன்

தமிழின விடுதலை என்பது , தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என்ற சகல தரப்பினரதும் பூரணத்துவமான சமூகப் பொருளாதார உரிமைகளிற்கான உறுதிப்பாட்டின் அடித்த்தளத்திலேயே கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி உழைத்தவர்.

உலகெங்கும் பரவி வாழும் சிறுபான்மை தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களிற்கு, நாம் வழங்கும் ஆதரவும், அங்கீகாரமுமே, சர்வதேச சமூகத்தில் எமது இனத்தின் சுயநிர்ணய உரிமைகளிற்கு பூரணமான அங்கீகாரத்தைப் பெற்று தரும் என்ற முறையில் அடக்கப்பட்ட அழிக்கப்படுகின்ற தேசிய இனங்களுடைய போராட்டங்களில் உளரீதியான உடல்ரீதியான பங்களிப்பைச் செலுத்தியவர்.
உலகெங்கும் பரந்து பட்டு வாழ்ந்த தமிழ் மக்களிடையே, தமிழ்த் தேசிய இனத்தின் முழுமையான சமுக விடுதலை குறித்து, புதிய பரிமாணங்களை உணர்த்தியதுடன் சர்வதேசமே, தமிழன் என்று ஓர் இனம் உண்டு அது சிதைக்கப்படுகின்றது, வதைக்கப்படுகின்றது என்று தனது பார்வையை எம்மேல் திரும்ப வைத்த போராட்டத் தலைவன்.

தளபதியின் வழிகாட்டலில் விண்ணை தொடும் விடுதலை முழக்கங்கள்

பிராந்திய, பூகோள அரசியலை கண்மூடித்தனமாக, உதறியெறிந்து, முறட்டுத்தனமான, அல்லது வறட்டுத்தனமான அயல் உறவுக்கொள்கையை கொண்டிராது, எமது இனத்தின் விடுதலையில், இந்திய அரசுகொண்டிருக்க வேண்டிய தார்மீக ஆதரவு, அக்கறை குறித்து தெளிவான கொள்கையைக் கொண்டிருந்த அவர், இத்தீவில் எந்த ஒரு அந்நிய தேச இராணுவத்தின் வருகையும் ஏற்படுத்தக்கூடிய குழப்பமான, படுபயங்கரமான விளைவுகளை தனது ஸ்தாபன நலன்களையும் மீறித் தெளிவுபடுத்தி எச்சரித்தவர்.

போராட்டத்திலோ அன்றி யுத்தத்திலோ சிநேக, பகை முரண்பாடுகளை கண்டுகொள்ளத் தவறிய கண்டு கொள்ள விரும்பாத தமிழ்ப் போராட்டத் தலைவர்களிடையே, தனது பாசறையின் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அழிக்கப்பட்டும், தனது ஸ்தாபனம் சகல முனைகளிலும் உருக்குலைக்கப்பட்டும் இருந்த நிலையில் கூட, சகோதரப் போராளிகள் அழிக்கப்படுவது அனுமதிக்க முடியாத தொன்றாகும் என, புலிகளிற்கெதிரான கடுமையான இந்தியத் தாக்குதலைக் கண்டித்து நியாயமான, முறையான போராட்டத்தின் இலக்கணங்களை, இனத்தின் அழிவைத் தடுப்பதில் தனக்கிருந்த அக்கறையை இனத்தின் முழுமையான விடுதலை குறித்து தான் கொண்டிருந்த தொலை நோக்குப் பார்வையை தனது இறுதிக் காலகட்டத்திலும் கூட பறைசாற்றிய தமிழ்த் தேசிய இனப் போராட்டத்தில் உண்மையான போராளி அவர்.

அந்த மக்கள் படையின் தளபதியின் ஒவ்வொரு கருத்தும், தீர்க்க தரிசனங்களும் காலத்தின் கட்டாய தேவைகளும் கடமைகளுமானவை.

அந்த கடைமைகளில் தவறியதன் பலன்களை நிகழ்காலங்கள் நித்தம் நித்தம் எமக்கு சொல்லித் தந்து கொண்டேயுள்ளன. எமது மக்கள் தமது உயரிய உழைப்புகளையும், பங்களிப்புகளையும் போராட்டத்திலிருந்து பிரிந்து விட்டுள்ளனர். போராட்டம் அவர்களை விட்டு அந்நியப்படுத்தப்பட்டு விட்டது.

மொழி, இனம், தேசம் என்ற எல்லைகளை கடந்து ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு லிபியாவில் அமெரிக்க தாக்குதலை எதிர்த்து முன்னின்று போராடும் தளபதி

தமிழினத்தின் தலைவிதியை தீர்மானிக்க விடுதலைத் தீயில் அர்ப்பணிக்கத் துடித்த இளைஞர்படை சின்னா பின்னப்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரத் தலைமைகளை புறக்கணித்து பச்சோந்தித் தனமான, சுயநலத்தனமான அரசியல் தலைமைகளை மக்கள் மனம்வெறுத்த நிலையில் தேட ஆரம்பித்துள்ளனர்.

எமது தேவைகளை, அபிலாஷைகளை அங்கீகரித்து, தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளைப் பெற்றிட உதவ வேண்டிய சிங்கள, முஸ்லிம் மலையாக மக்களால் உயரிய எமது போராட்டம் இனத்துவேச மூலாம் பூசிவிடப்பட்டுள்ளது. புரட்சியாளர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் நீண்டகால பாரம்பரியம் கொண்ட எமது மக்களின் தேசிய இனப் போராட்டம் ஓர் குறித்த பாசிசக் குட்டத்தின் அதிகார மோகம் கொண்ட கொலை வெறியாட்டம் என சிறுமைப்படுத்தப்பட்டு விட்டது.

இருந்தலூம்! வர்க்க முரண்பாடுகளும், அதன் வழித் தோன்றிய அடக்குமுறைகளும் பேரினவாதிகளின் வெறித்தனமான நடவடிக்கைகளும் தொடருமாயின் எமது இனம் மீண்டும் ஓர் முறை இந்த மகத்தான தளபதியின் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் படிப்பினைகளாகவும், வலிகாட்டல்களாகவும் ஏற்றுக்கொள்ளும் என்பது உறுதி.

தனதுவாழ்வின் பெரும்பகுதியை தாயக எல்லைப்புறங்களிலும் போராட்டக் களங்களிலும் கழித்துவிட்ட அந்த அசாதாரண மனிதனின் உணர்வுகளும், உழைப்புகளும், தியாகங்களும், அன்றுதான் அர்த்தம் பெற்றுக் கொள்ளும்.

Thanks…. “VIDUTHALAIP PAATHAI” July 1993

தோழர் கதிர்காமர் உமா மகேஸ்வரன் (முகுந்தன்)
( 18.02.1945 – 16.07.1989 )

சமுதாய சாக்கடையில்
நெளியும் மனிதப் புழுக்களுக்கு
புத்துணர்வூட்டி மனிதாபிமானமும்
மனித நேயமும் தளிர்த்திடவும்
புரட்சியின் பால் புதியதோர் சமுதாயம்
மண்ணில் மலர்ந்திடவும்
செவ்வானம் வேலுக்கு முன்னே
செங்கொடியை நாட்டிட
செங்குருதி சிந்திய புரட்சி மலரே!

புரட்சியாளர்கள் என்றுமே
மண்ணில் புதைக்கப்படுவதில்லை
விதைக்கப்படுகின்றனரெனும்
விந்தைதனை உலகறியச் செய்தவனே!

வியர்வையும் கண்ணீரும்
மண்ணை நனைக்கும்
விவேகமும் வேகமும் விண்ணைத் தொடும்
வீரமும் தீரமும் மண்ணை
மீட்கும் தோழா!

உன் இலட்சியத்தில் உறுதி கொண்டு
நாமும், எந்த மொழியாலும்
எந்த மதத்தாலும் எந்த ஜாதியாலும்
பிரிக்க முடியாத சமுக அமைப்பிணை
நிறுவி சகோதரத்துவப் பயிரை
அறுவடை செய்வோம்…
Thanks…. “VIDUTHALAIP PAATHAI” July 1993

மக்கள் மனம் வென்றவர்கள்!!!
( “வீர மக்கள் தினத்தை” – ஆடி.16 – முன்னிட்ட கவிதை!! )

போராட்ட பாதையிலே………
பிரகாசித்த விடி வெள்ளிகளே………
.போராட்ட பாதைதனை
செப்பனிட்ட தோழர்களே……
விடுதலை வானில்
பிரகாசித்த வெள்ளிகளில்
சூரியனாம் “உமா”வின்
வழி நடந்த தியாகிகளே…..
மக்களுக்காய் துமுக்கிதனை
மனமுவந்த ஏந்தி நின்று
மானிடத்தைக் காத்து நின்ற
மாண்புமிகு மனிதர்களே…..
மக்களின் வாழ்வுக்காய்
ஆதிக்க வெறியருடன்
போரிட்ட தீரர்களே…..!

“ உங்களது உயிர்தனை
துரோகிகள் பறித்தாலும்
மக்கள் மன ராஜ்ஜியத்தில்
வாழ்ந்திடுவீர் வீரமக்களே “!!!
– உமாநேசன் (Bern) –
Thanks…. “VIDUTHALAIP PAATHAI” July 1993

தோழர் உமாவிடமிருந்து…………………
“ நாம் துப்பாக்கி ஏந்துவதற்காக போராட வரவில்லை: போராடுவதற்காகவே துப்பாக்கியை எந்தினோம். “

“ தன் திவிதியை தனது சொந்தக் கரங்களில் எடுக்காத எந்த சமூகமும் உருப்படாது. “

“ எந்த ஒரு இயக்கமும் தமது போராட்டத்திற்கான யுத்த நடைமுறைத் தந்திரங்களை வகுக்கும் போது இழைக்கும் தவறுகள் அந்த இயக்கத்தை மட்டுமல்லாமல், முழுப் போராட்டத்தையும் பின் தள்ளக் கூடியது, அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடியது என்பதனை ஒவ்வொரு இயக்கங்களும் கருத்தில் எடுக்கத் தவறக் கூடாது. “
(தமிழீழத்தின் குரல் வெளியீடு – 04 )
Thanks…. “VIDUTHALAIP PAATHAI” July 1993

You might also like

Leave A Reply

Your email address will not be published.