;
Athirady Tamil News

நைஜீரியாவில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் – 23 பேர் உயிரிழப்பு

0

அபுஜா,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய மனித வெடிகுண்டு தாக்குதல்கள் அந்நாட்டை உலுக்கியுள்ளன. நைஜீரியாவின் வடகிழக்கு மாகாணமான போர்னோவின் தலைநகர் மைதுகுரியின் மையப்பகுதியில் உள்ள தபால் நிலையம் அருகே முதல் மனித வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் மக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே மக்கள் அதிகம் கூடியிருந்த சந்தையில் மற்றொரு குண்டு வெடித்தது. தொடர்ந்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் மைதுகுரி பல்கலைக்கழக ஆஸ்பத்திரி நுழைவாயிலிலும் ஒரு குண்டு வெடித்தது. மேலும், கலேரி என்ற குடியிருப்புப் பகுதியிலும் இதே போன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறு திட்டமிட்டு 4 இடங்களில் நடத்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் 23 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும், சுமார் 108 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ‘போகோ ஹரம்’ என்ற பயங்கரவாத அமைப்பே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த பயங்கரவாத அமைப்பை ஒடுக்க அமெரிக்கா ஏற்கனவே வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. மேலும், நைஜீரிய வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்க வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். தற்போது நகரம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.