;
Athirady Tamil News

ரஷியா தாக்குதலில் உயிரிழந்த கர்நாடகா மாணவர் – உடலை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை…!!

0

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் முக்கிய நகரங்களை தாக்கி வருகிறது. இந்நிலையில், கார்கீவ் நகரில் நேற்று ரஷியா ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் கர்நாடக மாநிலம் ஹாவேரி பகுதியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர் உயிரிழந்தார்.

கார்கீவ் நகரில் உள்ள தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் நவீன் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார். ரஷியா தாக்குதல் காரணமாக கார்கீவ் நகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அருகில் கட்டிடம் ஒன்றின் கீழ் தளத்தில் இந்திய மாணவர்களுடன் நவீனும் பதுங்கி இருந்து வந்துள்ளார்.

நேற்று உணவு பொருள் வாங்குவதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்ற நவீன் வரிசையில் நின்றிருந்தபோது, ரஷிய வீரர்கள் ஏவிய ராக்கெட் குண்டு அந்த பகுதியில் விழுந்து வெடித்தால், சம்பவ இடத்திலேயே நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தமது தந்தையுடன் செல்போன் மூலம் பேசிய இரண்டு மணி நேரத்திற்குள் நவீன் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் கர்நாடகா மாணவர் நவீன் ரஷிய தாக்குதலில் உயிரிழந்தது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளதாவது :

இந்திய மாணவர் ஒருவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப் படுத்துகிறோம்.

அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. (நவீன்) குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது உடல் பல்கலைக் கழகத்தில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தியர்களை விரைவில் போர் பகுதியில் இருந்து மீட்பதுடன் மட்டுமல்லாமல், நவீன் உடலையும் கொண்டு வருவோம்.

இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.