;
Athirady Tamil News

அதிகார வரம்பை மீறும் ஆளுநரின் பேச்சு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்..!!

0

தேசிய கல்விக் கொள்கை, நீட், இந்திய ஒன்றியம் போன்ற பல அடிப்படையான அம்சங்களில், தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசாங்கத்தின் நிலைபாட்டுக்கு மாறாக தமிழக ஆளுநர் பேசிக் கொண்டே இருப்பது நிறுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அண்மையில் ஆளுநர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டி, தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த பரிசீலனையை நடத்தியிருக்கிறார். அதில் தேசிய கல்விக் கொள்கையை அதன் சாரம் குறையாமல் அமல்படுத்துவது தான், பள்ளி மட்டத்திலேயே குழந்தைகளை வடிவமைக்க உதவும், இதன் மூலம் இந்திய தேசத்தை உலகின் அறிவு தலைநகரமாக மாற்றமுடியும் என பேசியிருக்கிறார். பெருவணிகமயமாகும் கல்வியால், சமூக நீதி தொலைக்கப்பட்ட, மொழி திணிப்பு அம்சங்கள் கொண்ட, மதவெறி சாராம்சத்தை உள்ளடக்கிய பாடத்திட்டத்தால் உருவாகும் அறிவு அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது, அபாய கரமானதாகத்தான் இருக்கும்.

கேந்திரிய வித்யாலயா மற்றும் அதன் பாடத்திட்டம் உள்பட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் வரும் என்றாலும், ஆளுநர் இது சம்பந்தமான கூட்டத்தில் பேசியிருப்பதைத் தனிமைப்படுத்தி பார்க்க முடியாது. ஆளுநரின் கடமைகள், அதிகார வரம்பு, அரசியல் சாசன கோட்பாடுகள், மாநில உரிமைகள் என முக்கிய அம்சங்களில் தமிழக அரசோடு முரண்படுகிறார் என்பது தான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

தமிழக அரசும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டிய பிறகும் ஆளுநர் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்துக்கு இணையானதொரு நிர்வாகத்தை ஆளுநர் நடத்த விரும்புகிறாரோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனவும், ஜனநாயக எண்ணம் கொண்டோர் குரல் எழுப்ப வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.