அதிக நன்கொடை பெற்றதில் தி.மு.க.வுக்கு ரூ.34 கோடி கிடைத்தது..!!
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அனைத்து அரசியல் கட்சியிலும் ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் அணைத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 2020-21-ம் நிதியாண்டில் மாநில கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. 54 மாநில கட்சிகளில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி 2020-21-ம் நிதியாண்டில் ரூ.60.15 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 2-வது இடத்தில் தமிழக கட்சியான தி.மு.க.வுக்கு ரூ.34 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ரூ.11.32 கோடி நன்கொடையுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ரூ.4.16 கோடி) 4-வது இடத்திலும் உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (ரூ.4.15 கோடி) 5-வது இடத்திலும் உள்ளது. மாநில கட்சிகள் பெற்ற நன்கொடைகளை பகுப்பாய்வு செய்ததில் 27 கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் மற்றும் அதற்கு கீழ் உள்ள விவரங்கள் அளிப்பதில் மொத்தம் ரூ.124.53 கோடி நன்கொடை பெற்றுள்ளது. மொத்த நன்கொடைகளில் சுமார் 91.38 சதவீதத்தை (ரூ.113.79 கோடி) 5 கட்சிகள் பெற்றுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தே.மு.தி.க., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி ஆகியவை 2020-21 நிதியாண்டில் நன்கொடை விவரம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. தி.மு.க., நாகாலாந்து மக்கள் முன்னணி, சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கும் கீழே பெறப்பட்ட நன்கொடைகள் விவரங்களை வழங்கியுள்ளன. 54 மாநில கட்சகளில் 6 கட்சிகள் மட்டுமே தங்களது நன்கொடை அறிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் குறிப்பிட்ட காலத்தில் சமர்ப்பித்துள்ளது. 25 கட்சிகள் 3 நாட்கள் முதல் 164 நாட்கள் வரை தாமதப்படுத்தி சமர்ப்பித்துள்ளனர். பீகார் மாநில கட்சிகளான ராஷ்டீரிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, லோக் ஜனசக்தி கட்சி ஆகிய கட்சிகள் நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் கிடைக்கவில்லை என்று ஏ.டி.ஆர். அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 2020-21 நிதியாண்டில் 2569 தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மூலம் கட்சிகளும் ரூ.25.37 கோடி கிடைத்துள்ளது. கார்ப்பரேட் வணிகத்துறையினரிடம் இருந்து 207 நன்கொடை மூலம் மாநில கட்சிகள் ரூ.95-45 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.