;
Athirady Tamil News

பெலகாவி கலெக்டர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி; எம்.இ.எஸ். அமைப்பினர் கைது..!!

0

மராட்டிய மந்திரிகளுக்கு அனுமதி வழங்க கோரி பெலகாவி கலெக்டர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற எம்.இ.எஸ். அமைப்பினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு
பெலகாவியை, மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருவதால் கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் பெலகாவியில் உள்ள மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகியோர் கடந்த 3-ந் தேதி பெலகாவிக்கு வருகை தர இருந்தனர். இதற்கு கர்நாடக அரசும், கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் தங்களது பயண திட்டத்தை மாற்றிய மராட்டிய மந்திரிகள் 6-ந் தேதி (அதாவது நேற்று) பெலகாவிக்கு வருகை தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் பெலகாவிக்கு வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறிய கர்நாடக அரசு, மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வர வேண்டாம் என்று கேட்டு கொண்டது. மேலும் மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வர பெலகாவி மாவட்ட கலெக்டரும் அனுமதி மறுத்து இருந்தார்.

எம்.இ.எஸ். அமைப்பினர் கைது
இந்த நிலையில் மராட்டிய மந்திரிகள் 2 பேரும் பெலகாவிக்கு வர அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பெலகாவி மாவட்ட கலெக்டரிடம் மராட்டி ஏகிகிரண் சமிதி (எம்.இ.எஸ்.) அமைப்பினர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். பெலகாவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திரும்பி செல்லும்படி கூறினர். ஆனால் இதற்கு மறுத்த எம்.இ.எஸ். அமைப்பினர் அத்துமீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனால் எம்.இ.எஸ். அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி அழைத்து சென்றனர். இதற்கிடையே நேற்று காலை மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் மராட்டிய வாகனங்கள் மீது கன்னட அமைப்பினர் கல்வீசி தாக்கினர். இதன் எதிரொலியாக மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த 8 கர்நாடக அரசு பஸ்கள் மீது சிவசேனா கட்சியினர் கல்வீசி தாக்கியதோடு கன்னட எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

போலீஸ் பாதுகாப்பு
முன்னதாக பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெலகாவி நகரில் 2 துணை போலீஸ் கமிஷனர்கள், 4 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதுபோல போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் எம்.பாட்டீல் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.