;
Athirady Tamil News

வரலாற்றில் என்றும் இல்லாத சவால்! அனைவரையும் ஒன்றிணைய ரணில் அழைப்பு !!

0

அரசாங்கத்திடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பணவீக்கம் அதிகரித்துள்ளமையால் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைமையை தாம் மறந்து விடவில்லை என்றும், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை கட்டம் கட்டமாக தீர்த்து அடுத்த வருடம் மக்களுக்கு மேலும் நிவாரணங்கள் வழங்கப்படுமென்றும் அதிபர் தெரிவித்தார்.

நுவரெலியா நகர மண்டபத்தில் இன்று (22) நடைபெற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான மாவட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர், “வரலாற்றில் என்றும் இல்லாததொரு சவாலுக்கே நாம் இன்று முகங்கொடுத்துள்ளோம்.

இந்நாட்டிலுள்ள மக்களின் பெரும் பகுதியினர் இன்று பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். பணவீக்க அதிகரிப்புடன் பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் இன்று அனைவருக்கும் இக்கட்டானதொரு நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களை நாம் மறந்து விடவில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதேநேரம் 2023 ஆம் ஆண்டில் மக்களுக்கு இதனை விடவும் நிவாரணங்களை வழங்க எதிர்பார்க்கின்றோம்.

நாம் முன்னேறிச் செல்ல வேண்டுமாயின் இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தை தாண்டிச் செல்ல வேண்டும். இதுபோன்ற உணவு பாதுகாப்பு வேலைதிட்டத்தில், நாம் அரசியல் நோக்கத்தை விடுத்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்தப் பொருளாதார வீழ்ச்சியானது இதற்கு முன்னர் இடம்பெறாததொன்று.

எனவே இப்பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசியல் நோக்கை விடுத்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

எம்மிடம் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் இந்த இடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இது தொடர்பில் நாம் தார்மீக ரீதியாகச் சிந்திக்க வேண்டும். எமக்கு வேறு வழியில்லை.

நான் அதிபராக பதவியேற்றதன் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் செய்யவில்லை. துன்பத்திலுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு முயற்சி செய்யும் வகையிலேயே நான் அனைவருடனும் கதைத்தும், அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தியும் வருகின்றேன்.

தோட்டங்கள், கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ள மக்களுக்கு நாம் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அரசியல் ரீதியாக எவ்வித வேறுபாடுகள் இருந்தாலும் இங்கே நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்றுவோம்.

எனினும் சிலர் இன்னும் பாரம்பரிய முறைப்படியே நினைத்துப் பார்க்கின்றனர். எல்லாப் பொறுப்புக்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்தால் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அவர்கள் நினைப்பார்கள். அது வெற்றியடையாது.

இன்று மக்கள் அரசாங்கத்தை மட்டும் குறை கூறவில்லை. ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். இன்று மக்களுக்கு இந்த அரசியல் முறைமையே வெறுத்துள்ளது. 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு நாம் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்.

இளைஞர்கள் இன்று அரசியலில் இருந்து விலகியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதாயின் நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும்.

நாம் நடைமுறையிலுள்ள அரசியல் முறைமை முழுவதையும் மாற்றுவதன் மூலம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கு முன்னர் நாம் மக்களின் பசியைத் தீர்க்க வேண்டும்.

இன்று மக்கள் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக சிரமப்படுகின்றனர். இந்நிலைமையை இல்லாமல் செய்வதாயின் எமது தவறுகளை திருத்திக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்த நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும்” – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.