நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை: 3 நாட்களுக்கு முன் 65 இலட்சத்திற்கு வாங்கப்பட்ட பேருந்து
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்னர் 65 இலட்சம் ரூபா கொடுத்து பேருந்தொன்று வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணைகளின் போது, அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
விசாரணை
தற்போது காவலில் உள்ள, சம்பவத்தின் இரண்டாவது துப்பாக்கிதாரியிடம் விசாரணை நடத்தியபோது, மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு, கொழும்பு கோட்டைக்குச் செல்வதற்கு முன்பு, தான் காரில் கொட்டாவ பகுதிக்குச் சென்றதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையிலிருந்து, அவர் தம்புள்ளைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் மொனராகலையை அடைய “கரந்தேனியே சுத்தா” அவருக்கு ஏற்பாடு செய்த பேருந்தில் ஏறியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பயன்படுத்தப்பட்டுள்ள பேருந்து
மொனராகலைக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியவரை ஏற்றிச் செல்ல மொரட்டுவ – கொழும்பு பாதையில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்து பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு நேற்று பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரைக் கைது செய்தது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, “கரந்தேனியே சுத்தா” ஓட்டுநரின் பெயரில் 65 இலட்சம் ரூபாய்க்கு பேருந்தை வாங்கியதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.