;
Athirady Tamil News

16 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை!

0

பாரதூரமான மற்றும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் மிக நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் உள்ளிட்டோரை சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் உள்ள 8 விடுதலைப்புலிப் போராளிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களின் மேன்முறையீடு நிலுவையில் உள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரின் வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து, அவற்றை நிறைவு செய்யுமாறு நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தலதா மாளிகை, மத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தபோது அவரையும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளார்கள்.

இவர்களை விடுதலை செய்வதாயின் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து ஆலோசனை கோரப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது”என சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.